திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள சுட்டகுண்டா வனப்பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர், தனக்குச் சொந்தமான கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அப்பொழுது, வனப்பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த காட்டுயானை சின்னதுரையை மிதித்துள்ளது. இதில் சின்னதுரை படுகாயமடைந்த நிலையில், இதனைக் கண்ட வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுப்பட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சிலர், உடனடியாக, சின்னதுரையை மீட்டு முதலுதவி அளித்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து ஆம்புலன்ஸ் மூலம் சின்னதுரையை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது, ஆம்புலன்ஸ் வரும் வழியிலேயே பஞ்சர் ஆகியுள்ளது. இந்நிலையில், சின்னதுரையின் உயிரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆனந்த் மற்றும் மருத்துவ உதவியாளர் சார்லஸ் ஆகியோர் ஆம்புலன்ஸை சாதுரியமாக ஓட்டி வந்து, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சின்னதுரையை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர்.
பின்னர், அங்கு சின்னதுரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு, தமிழ்நாடு - ஆந்திர வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், மேலும் கால்நடைகளை கவனத்துடன் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்லும் படி உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு! - Wild Elephant Attack