திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அண்ணான்டப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை சுமார் 23 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், இந்தப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 18ஆம் தேதி பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவரை ஆசிரியை ராஜலக்ஷ்மி என்பவர் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த சிறுமிக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறி, அது குறித்து கேட்க அந்த சிறுமியின் பெற்றோரும், உறவினரும் பள்ளியின் முன்பு குவிந்துள்ளனர்.
அப்போது, ஆசிரியை ராஜலக்ஷ்மி பள்ளி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளார். அதனை அருகில் இருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தச் சூழலில், தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், பள்ளி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் தங்களது கருத்துகளை கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.
இதனிடையே, திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்புராயனுக்கு இது குறித்த தகவல் அறிந்து ஆசிரியை ராஜலக்ஷ்மியை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதையும் படிங்க: தனி சுடுகாடு வேண்டும்.. நெல்லை ஆட்சியரிடம் திருநங்கைகள் கோரிக்கை!