திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் இரு மாணவர்கள் இடையே பள்ளியில் சிறிய வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காயம்பட்ட மாணவன் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோரான ஜோதி கிளி மற்றும் இசக்கி ராணி ஆகியோர் தனது மகனை அடித்ததாக கூறப்படும் மாணவனின் வீட்டிற்குச் சென்று சண்டையிட்டுள்ளனர்.
மாணவன் எங்கே என அவனது தாயிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அக்கிராமத்தின் கோயில் அருகே மாணவன் விளையாடிக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது மகன் வீட்டுக்கு வந்த பிறகு அது குறித்து விசாரணை செய்து அவனை கண்டிக்கிறேன் எனவும் தாய் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆத்திரம் குறையாத ஜோதி கிளி மற்றும் இசக்கி ராணி ஆகிய இருவரும், கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த மாணவனின் முடியைப் பிடித்து இழுத்து அவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிறைத்துறை அதிகாரிக்கு கூகுள் பே மூலம் பணம்? சிறைக்குள்ளே பேசிய வீடியோ கால் லீக்.. ஈரோடு மாவட்ட சிறையில் நடப்பது என்ன?
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்தது. மாணவனின் கையை முறுக்கி, கழுத்தைப் பிடித்து தாக்கியதாகவும், அதனால் மாணவனின் கழுத்து கைப்பகுதியில் உள்காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஜோதிகிளி மாணவனின் வயிற்றில் மிதித்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் காயம்பட்ட மாணவனை அவனது தாய் மற்றும் உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடைய, மாணவனை தாக்கிய ஜோதி கிளி மற்றும் இசக்கி ராணி ஆகியோர் மீது காயம்பட்ட மாணவனின் தாய் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மாணவனை தாக்கிய தாய் இசக்கிராணியை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய இசக்கிராணியின் கணவரான ஜோதி கிளியை தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்