ஈரோடு: காட்டு யானையைப் பார்த்தால் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடிவிடுவர் என்று நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், காட்டுயானை ஒன்று தினந்தோறும் அரசுப் பேருந்தை எதிர்பார்த்து காத்திருக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சம்பவம் தாளவாடியில் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்- ஆசனூர் வனச்சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த பகுதியில் இயக்கப்படும் வாகனங்கள் 30 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றன.
இதனால் இவ்வழியாகச் செல்லும் கரும்பு லாரிகளை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என அவ்வப்போது சில காட்டு யானைகள் சாலைகளில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் இவ்வழியாக பயணம் மேற்கொள்ளும் அரசுப் பேருந்தையும் அதனை ஓட்டிவரும் ஓட்டுநரையும் காண்பதற்காக ஆண் காட்டுயானை ஒன்று தினந்தோறும் காத்து இருப்பதாகக் கூறுகின்றனர்.
சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தை குமரேசன் என்பவர் இயக்கி வருகிறார். நாள்தோறும் சத்தியமங்கலத்தில் இருந்து குமிட்டாபுரம் வனச்சாலை வழியாக தாளவாடிக்குச் செல்லும் பேருந்தை ஓட்டி வரும் குமரேசன், குமிட்டாபுரம் வனச்சாலையில் நிற்கும் யானையை பார்த்து கையசைத்துச் செல்வாராம்.
இதற்காக ஒற்றை ஆண் யானையும், அரசுப் பேருந்து வரும் வரை அங்கேயே காத்திருக்கும் எனக் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து, குமிட்டாபுரம் சாலையில் செல்லும் போது வழக்கம் போல நின்றிருந்த யானையைப் பார்த்த ஓட்டுநர் குமரேசன் கையசைத்துச் சென்றார்.
இதனை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த பயணிகள் பலரும் இந்த யானைக்கு 'லக்கி எலிபெண்ட்' என பெயர் சூட்டி உள்ளனர். மேலும், இந்த யானை பார்த்துச் செல்வதால் தங்கள் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 Vs மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024.. என்னென்ன மாற்றங்கள்? முழு விவரம்!