ஈரோடு: ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதிச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், தனது வீட்டின் வெளியே பட்டி போட்டு 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் அந்த ஆடுகளுடன் பப்பி என்ற நாய் ஒன்றையும், கடந்த 2 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். ஆடுகளும் பப்பி என்ற நாயும் ஒன்றாக நட்புடன் வளர்ந்து வந்துள்ளது.
மேலும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் போது, நாயும் உடன் சென்று ஆடுகளுக்குப் பாதுகாப்பு அரணாகவும், பாசமாகவும் வளர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆடுகள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, உணவுகள் சரிவர உட்கொள்ளாமல், சப்தம் எழுப்பியபடி இருந்து வந்துள்ளது. அதனைக் கண்ட மாதேஸ்வரன் சரக்கு வாகனத்தில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு, ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, ஆடுகளை விட்டுப் பிரிய மனமில்லாத பப்பி நாய் தானும் சரக்கு வாகனத்தில் ஏற முயற்சி செய்துள்ளது. ஆனால் பப்பியை வாகனத்தில் ஏற்றாமல் ஆடுகளை மட்டும் ஏற்றிக் கொண்டு, மாதேஸ்வரன் சரக்கு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் ஒன்றாகப் பாசத்துடன் வளர்ந்த நாயோ, ஆடுகளைப் பிரிய மனம் இல்லாமல் சரக்கு வாகனத்தின் பின்னே சுமார் 3 கிலோ மீட்டர் துரத்திச் சென்றுள்ளது.
அப்போது பொதுமக்களில் ஒருவர் ஆடுகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை நாய் ஒன்று பின் தொடர்வதைக் கண்டு, தனது செல்போன் மூலமாக வீடியோ பதிவு செய்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, ஆடுகளைக் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின்னர், மீண்டும் சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தனது இருப்பிடத்திற்கு மாதேஸ்வரன் வந்துள்ளார். அப்போது மீண்டும் 3 கிலோ மீட்டர் மருத்துவமனையிலிருந்து வாகனத்தின் பின்பே வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. ஆடுகளுடன் ஒன்றாக வளர்ந்த நாய், ஆடுகளைப் பிரிய மனமில்லாமல் நடத்திய பாச போராட்ட வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கையை பிளேடால் அறுத்து நூதன போராட்டம்.. என்ன காரணம்?