திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் நெல்லை தனிப்படை போலீசாருக்கு பல்வேறு விஷயங்கள் கிடைக்கப்பெற்றும் வழக்கானது சூடுபிடிக்காமல் உள்ளது. கடந்த 2ஆம் தேதி காணாமல் போன ஜெயக்குமாரின் சடலம் மே 4ஆம் தேதி கரைசுத்து புதூரில் உள்ள அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் மிக கோரமாக கண்டெடுக்கப்பட்டது.
வல்லுநர்கள் அறிக்கை: முதலில் ஜெயக்குமார் காணாமல் போனதாக கூறப்பட்டது. பின்னர் அவர் தோட்டத்தில் மர்மமான முறையில் சடலமாக உயிரிழந்து கிடந்தார். பாதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஜெயக்குமார் உடலில் நுரையீரலில் திரவங்கள் எதுவும் இல்லை என தெரிந்தது. அதேபோல, அவரது குரல்வளை முற்றிலுமாக எரிந்துவிட்டதாக கூறப்பட்டது. ஏற்கெனவே இறந்தவரின் உடலை எரித்தால் மட்டுமே இதுபோன்ற அறிகுறிகள் காணப்படும் எனவே ஜெயக்குமார் எரிக்கப்படுவதற்கு முன்பே இறந்திருக்கலாம் என வல்லுநர்கள் தெளிவுபடுத்தினர்.
அதன்படி, ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. அதேசமயம் இறப்பதற்கு முன்பு அவர் எழுதியதாக வெளியான கடிதங்களில் அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களால் தனக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பல நபர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருப்பதாகவும் அவற்றில் அவர் வேதனையோடு தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டது. எனவே, ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.
கொலைக்கான முகாந்திரம்: இந்நிலையில், ஜெயக்குமார் உடல் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டது மற்றும் உடற்கூறாய்வு அறிக்கை உட்பட பல்வேறு சம்பவங்கள் அவர் கொலை செய்யப்பட்டதற்கான முகாந்திரத்தை காட்டுவதாக உள்ளது. ஆனால், கொலைக்கான தடயங்களும் இதுவரை சிக்கவில்லை. எனவே இந்த வழக்கில் துப்பு துவங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஜெயக்குமாரின் மகன்கள், சகோதரர்கள், மருமகன் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்தனர். அதேபோல, கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நபர்களிடமும் விசாரணை நடைபெற்று முடிந்தது. இறுதியாக ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட தோட்டத்தின் அருகில் உள்ள கிணற்றிற்குள் தடயங்கள் எதுவும் சிக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
கிணற்றில் கிடைத்தது தடயமா?:அதன்படி நேற்று முதல், கிணற்றில் இருந்த தண்ணீர் மின் மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்றும் பணி தொடங்கி இன்று நீரை முழுமையாக வெளியேற்றிய நிலையில் போலீசார் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. குறிப்பாக மாயமான ஜெயக்குமாரின் செல்போன்கள் கிணற்றில் கிடைக்குமா என போலீசார் தேடிப் பார்த்தனர். செல்போன்களும் சிக்கவில்லை. அதேசமயம் கிணற்றில் இருந்து ஒரேயொரு கத்தி மட்டும் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த கத்திக்கும், ஜெயக்குமார் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என தடய அறிவியல் துறையினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். ஒருவேளை ஜெயக்குமார் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் பிரேத பரிசோதனையின்போதே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், அதுபோன்ற தகவல் எதுவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கவில்லை.
இதையும் படிங்க: பெண்ணுடன் ரகசிய பேச்சு? 'மும்பை போன் கால்'.. ஜெயக்குமார் வழக்கில் பகீர் திருப்பம்