மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் என்ற மீனவர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் கடற்கரைப் பகுதியில் கடந்த 12 ஆம் தேதி காலை உலோகத்தால் ஆன உருளை வடிவ மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் ஒன்றை அடி நீளமும், 6 அங்குல விட்டமும் கொண்ட வெள்ளை நிற மர்மப் பொருளின் மேலே அபாயகரமானது, தொடாதீர்கள், காவல்துறைக்குத் தெரிவியுங்கள் என அச்சிடப்பட்டிருந்தது.
இதனைக் கண்ட மீனவ கிராம மக்கள் அது வெடிக்கக் கூடிய தன்மை உடைய பொருளாக இருக்குமோ என அச்சமடைந்து இது குறித்து உடனடியாகக் கடலோரப் பாதுகாப்பு குழும போலீசாருக்கும், பூம்புகார் கடற்கரை போலீசார்க்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, அங்குச் சென்ற கடலோரப் பாதுகாப்பு போலீசார் மர்மப் பொருளைப் பார்வையிட்டு, அதன் அருகே பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பைத் தீவிரப்படுத்தினர். அந்த உருளை குறித்து வெடி பொருள் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து அதனைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தினர். இதனால் நாயக்கர் குப்பம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடற்கரை பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வானில் பல மீட்டர் உயரத்திற்கு வண்ணப்புகையை வெளியேற்றி அபாயச் சமிக்ஞை தெரிவிப்பதற்காக நீர்மூழ்கிக் கப்பலில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் என தெரியவந்தாக கூறப்படுகிறது. மேலும் அப்பொருளில் அபாயகரமானது, தொடாதீர்கள், காவல்துறைக்குத் தெரிவியுங்கள் எனவும் அச்சிடப்பட்டிருந்தது.
எனவே, இது குறித்து சென்னை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர் குழுவுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (பிப்.22) சென்னையிலிருந்து வருகை தந்த நிபுணர்கள் குழுவினர் அதனைப் பாதுகாப்பாக வெடிக்க வைத்து செயல் இழக்கச் செய்தனர்.
முன்னதாக புதுக்குப்பம் கடற்கரைப் பகுதியில் ஆழமான குழி தோண்டப்பட்டு அதில் சிக்னல் டிவைஸ் கருவி வைக்கப்பட்டு வெடிகுண்டு செயல் இழப்பு செய்யும் கருவிகளுடன் இணைப்பு ஏற்படுத்தி அதனை வெடிக்க வைத்துப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
வெடிக்க வைக்கும் பணிகள் தொடங்கியதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகத் தீயணைப்பு வாகனம், 108 மீட்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாகக் காலை முதலே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: அக்பர், சீதா விவகாரம்: பெயர்களை மாற்ற கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு! என்ன காரணம்?