சென்னை: நீட் தேர்வில் 129 மதிப்பெண் எடுத்துவிட்டு 698 மதிப்பெண் எடுத்ததுபோல், அரசு முத்திரையுடன் போலி சான்றிதழைத் தயாரித்து சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சி செய்த மாணவரை கைது செய்த போலீசார், போலி சான்றிதழ் தயாரிக்க உடந்தையாக இருந்த நபர்களையும் தேடி வருகின்றனர்.
சென்னை மேடவாக்கம் ரவி தெரு ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் லக்சை. இவர் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு கடந்த 29ஆம் தேதி பெற்றோருடன் சென்றுள்ளார். அப்போது, தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 698 மதிப்பெண் எடுத்துள்ளதாகவும், தனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான அனுமதி இருப்பதாகவும் அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, மாணவர் லக்சை வைத்திருந்த சான்றிதழ்களை வாங்கிப் பார்த்த போது, அதன்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து மாணவனிடம் தெரிவிக்காமல், "நீங்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு செல்லுங்கள், உடனே கிடைத்து விடும்" என்று அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே, சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவ அதிகாரிகள் உடனே கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணை மருத்துவக் கல்வி இயக்குநருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் தலைமறைவாக இருந்த டிராவல்ஸ் உரிமையாளரின் மனைவி கைது!
அதனை அறியாத மாணவன் தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு, நேரடியாக அங்கு சென்று துணை மருத்துவக் கல்வி இயக்குநரை சந்தித்துள்ளார். அப்போது, மாணவனின் நீட் சான்றிதழ், கல்லூரிக்கான அனுமதி சான்றிதழ்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்தபோது, அவை அனைத்தும் அது போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. அதையடுத்து துணை மருத்துவக் கல்வி இயக்குநர் கராமத் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவர் லக்சை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் கடந்த 2023ஆம் ஆண்டு நீட் தேர்வில் 127 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பதும், அதன் பின்பு கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 129 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காக 129 மதிப்பெண் எடுத்த சான்றிதழை மாற்றி 698 மதிப்பெண் எடுத்ததாகப் போலியான சான்றிதழ்கள் தயார் செய்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கான அனுமதிச் சீட்டையும், அரசு லோகோவுடன் போலியாக தயாரித்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த போலி சான்றிதழை தயாரித்து கொடுத்தது திருவான்மியூரில் உள்ள அடையார் ஸ்டூடண்ட் ஜெராக்ஸ் கடையின் ஊழியர் என்பதும், இதில் பாலவாக்கத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி ஊழியர் பாத்திமா என்பவருக்கும் தொடர்புள்ளது எனவும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது, சம்மந்தப்பட்ட இருவரும் தலைமறைவாகி விட்டதால், அவர்களை தீவிரமாகத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, கைதான மாணவர் லக்சை மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள பாத்திமா உள்ளிட்ட 2 பேர் பலருக்கு இதேபோல சான்றிதழ் தயாரித்துக் கொடுத்துள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்