சென்னை: 18-ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பைத் தாண்டி இந்தியா கூட்டணி 234 இடங்களைப் பிடித்தது. பாஜக தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 292 இடங்களைப் பிடித்து 3-ஆவது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய அளவில் பாஜக வலுவான தேசிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடைய முயன்று வருகிறது. திராவிட கட்சிகளே தொடர்ச்சியாக தமிழகத்தை மாறி, மாறி ஆண்டு வருகின்றன. தேசிய கட்சிகள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் நிலையே தமிழகத்தில் உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. ஆனால் தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக பாஜக தனிக்கூட்டணியை உருவாக்கியது.
பாஜக கூட்டணி: பாஜக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக, தமாகா, பாமக, புதிய நீதி கட்சி, ஐ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது.
அதிமுக கூட்டணி: தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து அதிமுக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது.
பாஜக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 1 தொகுதியும், அமமுக 2 தொகுதியும், தமாகா 3 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும் போட்டியிட்டது. மேலும், ஏ.சி சண்முகம், தேவநாதன் யாதவ், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோர் 1 தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். மொத்தமாக, பாஜக 24 இடங்களில் நேரடியாக களம் கண்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவில், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியவில்லை என்றாலும், வாக்கு சதவிகிதம் அதிகமாகியிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள். பாஜகவின் வாக்கு சதவிகிதம் கடந்த 2014 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார். உண்மையில் பாஜக வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதைப் பார்ப்போம்.
கடந்த தேர்தல்களில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் எவ்வளவு?:
வ.எண் | தேர்தல் ஆண்டு | தொகுதிகள் | வாக்கு சதவிகிதம் (%) |
1 | 2014 | 9 | 5.5 |
2 | 2019 | 5 (அதிமுக கூட்டணி) | 3.7 |
3 | 2021 (சட்டசபை தேர்தல்) | 4 (வெற்றி) | 2.6 |
4 | 2024 | 24 | 11.24 |
ஈபிஎஸ் போடும் கணக்கு?: எடப்பாடி பழனிசாமி குறைந்துள்ளது என்கிறாரே அவை எப்படி என்று பார்த்தால், கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 18.80 ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 18.28 மொத்தம் 0.52 வாக்கு சதவிகிதம் குறைவாக உள்ளது. இதைத் தான் எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது எனக் கூறுகிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு 9 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டு 5.5 வாக்கு சதவீதத்தைப் பெற்றது. தற்போது தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே. 9 தொகுதிகளுக்கு 5.5 சதவிகிதம் என்றால், அதே சதவிகிதம் தற்போது போட்டியிட்ட 24 தொகுதிகளுக்கு கிடைத்திருந்தால் குறைந்தது 15 சதவிகித வாக்குகளை பாஜக பெற்றிருக்க வேண்டும். ஆனால், பாஜக பெற்றிருப்பதோ 11.24 வாக்கு சதவிகிதம். அப்படியென்றால் பாஜக பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் குறைவு தான் என்கின்றனர் இணையவாசிகள் .
2014 ஆண்டுடன் - 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவிகிதத்தை ஒப்பிட்டு பார்த்தாலும் சரி, பாஜக கூட்டணி சதவிகிதத்தைப் பார்த்தாலும் சரி, பாஜக வாக்கு சதவிகிதம் குறைந்து தான் உள்ளது.
இதையும் படிங்க: "தமிழீழம் அமைக்க மோடி உதவ வேண்டும்" - மதுரை ஆதீனம் தடாலடி பேட்டி! - Madurai Adheenam Demand to modi