சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினுடைய இரண்டாம் நாள் கூட்டம் எம்.பி கனிமொழி தலைமையில் இன்று (பிப்.27) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் வணிகர்கள், விவசாயிகள், தொழில் பிரிவினர், பொதுமக்கள், என பல தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று (பிப்.26) காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அமைப்பினுடைய நிர்வாகிகள், தொழிலாளர் நல சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாணவர் அமைப்புகள் என பல்வேறு தரப்புகளிடமும் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்துக்களை கேட்டு வருகிறது. மேலும் பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என திமுக தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஜாதி மறுப்பு இணையர்கள் நல சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை எம்.பி கனிமொழியிடம் வழங்கி உள்ளது அந்த மனுவில், "ஜாதி ஆணவ படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
சுயமரியாதை மற்றும் ஜாதி மறுப்பு திருமணங்களை பதிவு செய்ய பெற்றோர் சம்மதம் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் திருமணத்தை பதிவு செய்ய மறுக்கக்கூடாது என அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் வழங்கபடும் தொகையினை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கபட வேண்டும். இந்திய ஒன்றிய அரசு 'அம்பேத்கர் பவுண்டேசன்' கீழ் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு வழங்கும் 2.5 லட்சம் தொகையை அனைத்து ஜாதி மறுப்பு இணையர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என கோரிக்கைகளை வைத்துள்ளது.
இதையும் படிங்க: "என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்" - விசிக திருமாவளவன்!