சென்னை: கல்யாணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற ஒவ்வொரு விழாக்களிலும் சீர்வரிசை கொடுப்பது என்பது தமிழகத்தின் பாரம்பரியங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் உறவு முறைகளில் பெற்ற தாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அதே அளவிற்கு தாய்மாமனுக்கு முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம்.
அந்த வகையில், சென்னை ஆவடி அருகே ஆலந்தூரைச் சேர்ந்த கலைவாணன் - அபிராமி தம்பதியின் மகள் ஹர்ஷிகா என்பவருக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்த திட்டமிட்டு, விழாவிற்கான ஏற்பாடுகளையும் தடபுடலாகச் செய்துள்ளனர்.
இந்த நிலையில், விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில், ஹர்ஷிகாவின் தாய்மாமனான அபிலாஷன் என்பவர், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு, வீட்டில் இருந்து தனது தங்கை மகளை வண்டலூர் - மீஞ்சூர் சாலையில் ஊர்வலமாக விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வந்துள்ளார்.
மேலும் நகைகள், புத்தாடைகள், மா, பலா, வாழை, மாதுளை, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளுடன் அனைத்து வகை மிட்டாய்கள், அரிசி, பருப்பு மற்றும் இனிப்பு வகைகள் என சுமார் 100 வகைகளில் சீர்வரிசை கொண்டு வந்துள்ளார்.
சீர்வரிசைகளில் சிலவற்றை தங்கள் கைகளில் சுமந்தும், மேலும் சிலவற்றை மாட்டு வண்டியில் கொண்டும் வந்தனர். இதற்காக மேளதாளம் முழங்க, தடபுடலான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த விழா ஏற்பாடு ஆலந்தூர் பகுதியில் உள்ள அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் இருந்தது.
தாய்மாமன் சீர்வரிசையுடன் தனது மருமகளையும் அழைத்துக் கொண்டு விழா நடக்கும் பந்தலை நோக்கி அழைத்து வந்தார். இந்த விழா அந்த குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியையும், பொதுமக்களின் மத்தியில் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இடையும் படிங்க: ஈசிஆர் ரோடு விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட மரங்கள் மறுநடவு.. துளிர்விட்டு அரும்பிய மரங்கள்!