சென்னை: தாம்பரம் ரங்கநாதபுரம் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு. குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு தாரிஸ், கோகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தாரிஸ் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பதினொறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தீவிர சைவ பிரியரான தாரிஸ் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார். இதனால் வீட்டில் அசைவ உணவு சமைக்காமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகையின்போது தாரிசின் தம்பி கோகுல் அருகில் நண்பர்கள் கொடுத்த சிக்கன் பிரியாணியை வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். அப்போது தாரிஸ் என் அருகில் பிரியாணியை வைத்து சாப்பிடாதே என தம்பியை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று வீட்டில் தாரிஸ் தனி அறைக்கு சென்று வெளியில் வராமல் இருந்துள்ளார்.
மேலும், இரவில் வெகு நேரமாகியும் வெளியில் வராததால், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது தற்கொலை அவர் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. உடனடியாக கதவை உடைத்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் மாணவன் தாரிஸின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த தாம்பரம் போலீசார், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்டதால் ஏற்பட்ட தகராறில், அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எந்த பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது 044-24640050 உதவி எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் 'இன்ஸ்டன்ட்' காதல்.. 17 வயசு சிறுமி ஓட்டம்.. போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோருக்கு நேர்ந்த துயரம்! - instagram relationship