திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் உள் நோயாளிகள், புற நோயாளிகள் என 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் பகல், இரவு என பல்வேறு சுற்றுகளாக மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வந்தாலும், தற்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை நீடித்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு, தூய்மைப் பணியாளர் ஒருவர் ட்ரிப்ஸ் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் முழுமையான சரியான சிகிச்சை அளிக்காமல் தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் மூலம் சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதத்ளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் கனகவள்ளி சிகிச்சை அளித்தது தொடர்பாக, தலைமை செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர் சித்ரா ஆகியோருக்கு மருத்துவமனை சூப்பிரண்டு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கி விளக்கம் கேட்டுள்ளார். மேலும், தூய்மைப் பணியாளரை பணி நீக்கம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செவிலியர் சித்ராவை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு பணிமாறுதல் செய்துள்ளதாகவும், தலைமை செவிலியர் கண்காணிப்பாளரை வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு மாற்றி உள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் திலகா தெரிவித்துள்ளார்.