மதுரை: மதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் 'பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில், மதுரை அண்ணாநகர் பகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, "கடந்த காலத்தில் இந்திய அரசியலை மாற்றியது - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றியது 40 எம்பிக்களை வைத்திருந்த திமுகதான். அந்த அடிப்படையில், தேசத்தைக் காப்பாற்ற - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்த கூட்டத்தை 40 தொகுதிகளிலும் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மோடி அரசு என்ன செய்தது?
குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, பாகிஸ்தானிலிருந்தும், பங்களாதேஷில் இருந்தும் அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு கடந்த 1971ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டப் பிரிவிற்கு மாற்றாக, இந்த நாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர்களைத் தவிர மற்ற இந்துக்களை, கிறிஸ்தவர்களை, பௌத்தர்களை சேர்த்துக் கொள்ளலாம் என மோடி அரசு கூறுவது என்ன நியாயம்?
இஸ்லாமியர்கள் 3 தலைமுறைகளாக இங்கு இருக்கிறார்கள். இந்த மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்திற்கு திமுக திருத்தம் கொடுத்தோம். நாடாளுமன்றத்தில் அதிமுக, பாமக எம்பிக்கள் எங்களுடன் சேர்ந்து, திருத்தத்திற்கு குரல் கொடுக்கவில்லை. ஆனால் அதிமுக எடப்பாடி பழனிசாமி, எஸ்டிபிஐ (SDPI) மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம், இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக தன்னைக் காட்டிக் கொள்கிறார்.
அதேபோல, அதானி குழுமம் லட்சக்கணக்கான கோடி ஊழல் செய்து இருக்கிறது. அந்த நிறுவனம் பல நாடுகளில் பங்குகளைப் போலியாக குளறுபடி செய்து, தன்னை பெரிய நிறுவனமாக காட்டிக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களிடம் கடன் பெற்று, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை குழுமம் பெற்றது.
இந்த அதானியை அழைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவிற்கும், சிங்கப்பூருக்கும், அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இன்னும் 15 நாடுகளுக்கு மோடி அழைத்துக் கொண்டு சென்றார். அந்த நாடுகளில் பல நிறுவனங்களுடன் அதானி குழுமம் ஒப்பந்தம் செய்ய உதவியது மோடிதான்.
Fraud அதானிக்கும், உங்களுக்கும் என்ன பங்கு என மோடியிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். மோடி பதிலளிக்காமல் அமைதி காத்தார். அதானி Fraud என ஆய்வு நிறுவன அறிக்கை குறிப்பிட்டதற்கு பதில் சொல்லாத பிரதமர் மோடியும் Fraud ஆகத்தான் கருதப்படுவார்.
மதுரை மக்களின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டுச் சொல்கிறேன், நான் இந்த ஊரில்தான் சட்டம் படித்தேன். 31 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகி, பல பிரதமர்களைப் பார்த்து இருக்கிறேன். ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங், வாஜ்பாய் உள்பட எந்த பிரதமரும், ஏன் நேரு காலத்திலிருந்தே கேள்வி நேரத்தில் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நாடாளுமன்றத்திற்கு எந்த பிரதமரும் வராமல் இருந்தது இல்லை.
கேள்வி நேரத்தில் எந்த பிரதமரும் தவிர்க்க மாட்டார்கள். ஏனென்றால், கேள்வி நேரத்தில் கேட்கப்படும் பிரச்னைகளுக்கு அமைச்சர்கள் தரும் பதில் திருப்தி என்றால் நாடு சுபிட்சம் என்று அர்த்தம். கேள்வி நேரத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டால், அரசாங்கத்தில் குளறுபடி என்று அர்த்தம்.
நரேந்திர மோடி போன்று நாடாளுமன்றத்தை அவமதித்த ஒரு பிரதமர் உலகத்திலேயே எவருமே இல்லை. பல நாடுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக பல நாடுகளின் நாடாளுமன்றங்களைப் பார்த்தவன் என்ற முறையில் இதனை உறுதியாகச் சொல்கிறேன்.
ஒரு நாள் கூட, கேள்வி நேரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இருந்தது இல்லை. அதானி குற்றச்சாட்டு, ரபேல் குற்றச்சாட்டு உள்பட அவர் மீது வைக்கப்படுகின்ற எந்த குற்றச்சாட்டிற்கும் பிரதமர் மோடி பதில் சொல்வது இல்லை. அவர் செய்வது எல்லாம் உச்ச நீதிமன்றம் சென்று Stay வாங்குவதுதான்.
அதானி 45 நாடுகளில் ஊழல் செய்து இருக்கிறார். இந்தியாவின் பங்குச் சந்தையை நிர்வகிக்கும் செபி (Securities and Exchange Board of India) அமைப்பு அந்த ஊழல்களை விசாரிக்க முடியுமா? மும்பையில் நடக்கும் குற்றச் சம்பவத்திற்கு மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க முடியுமா? இங்கே உள்ள எஸ்.ஐ விசாரிக்க முடியுமா? இவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிற மோடிதான் பிரதமராக உள்ளார்.
ஊழலைப் பற்றி பேசவோ, மதச்சார்பின்மை பற்றிப் பேசவோ அதிகாரமில்லாத மோடி, நான்கு நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் சொல்கிறார். இந்த தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காலில் முள் தைத்தால், கண்ணிலே தண்ணீர் வர வேண்டும். நான் கேட்கிறேன்.
தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும், சென்னையிலும் மழை வெள்ளம் வந்து பயிர்கள் சேதம், வீடுகள் இழப்பு, மனித உயிர் இழப்பு ஏற்பட்டபோது, பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட வந்தார். நமது எம்.பி கனிமொழி உடன் சென்றார். 37 ஆயிரம் கோடி, மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டோம்.
இந்தியாவின் கால், உங்கள் கூற்றுப்படி தமிழ்நாடு. இந்த தமிழ்நாட்டின் பாதத்தில் முள் தைத்து விட்டது. டெல்லியில் இருக்கும் உங்கள் கண்களில் தண்ணீர் வரவில்லையே. தமிழ்நாட்டிற்கான கோரிக்கையாக எதை மோடி அரசாங்கத்திடம் கேட்டாலும் அவர்கள் சொல்கிற பதில் ஒன்றுதான் பாரத மாதாவிற்கு ஜே, ஜெய் ஸ்ரீராம்” என்றார்.
இதையும் படிங்க: சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!