ஈரோடு: நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா, பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் ஒன்றியம் அரசூர், செண்பக புதூர், அரியப்பம்பாளையம் ஆகிய கிராமப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த வகையில், செண்பக புதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக, இருசக்கர வாகனம் ஏற்றிய அலங்கரிக்கப்பட்ட காளை மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து, ஆ.ராசா வாக்கு சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து அரசூர் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, பாஜக அரசைக் கண்டித்து பக்கோடா சுட்டு பொதுமக்களுக்கு வழங்கிய ஆ.ராசா நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க வந்த ஆ.ராசாவுக்கு மேளதாளங்களுடன் பெண்கள் நடனமாடியும், பட்டாசுகள் வெடித்தும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் ஆ.ராசா பேசிய போது, “எந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும் நாடாளுமன்றத்துக்கு வராத ஒரே பிரதமர் மோடி தான். தேர்தல் பத்திரமாக 45 கம்பெனிகள் 2,000 கோடி ரூபாய் மோடிக்கு கொடுத்துள்ளனர். அதை உச்ச நீதிமன்றம் விசாரித்தால், 35 கம்பெனிகள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது தெரிய வந்துள்ளது.
நஷ்டத்திற்கு இயங்கும் கம்பெனிகள் எப்படி 2,000 கோடி கொடுக்க முடியும்? ஆகவே கருப்பு பணத்தை பாஜகவினர் வெள்ளையாக்கி உள்ளனர். ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற மோடி, மேட்டுப்பாளையத்துக்கு வந்து திமுக ஊழல் கட்சி என்கிறார். அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஊழல் செய்தவர்களை மோடி பாஜகவில் சேர்த்துக் கொள்கிறார்.
ஊழல் செய்தவர்கள் பாஜகவில் சேர்ந்தால் உத்தமன் ஆகி விடுகின்றனர். அதனால் தான் ஸ்டாலின் சொன்னார், மோடி வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். மோடியை நாட்டை விட்டு அனுப்பி விட்டு மதச்சார்பற்ற ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்றால். அது ஸ்டாலினால் தான் முடியும்.
திமுக ஊழல் கட்சி என மேட்டுப்பாளையத்தில் மோடி சொல்கிறார். சொல்வது யாரு? ஊழல்வாதிகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுக்கிற பெரிய ஊழல்வாதி. அரசியல்வாதிகள் எவரெல்லாம் ஊழல் செய்தார்களோ, அவர்களை எல்லாம் கூப்பிட்டு பாஜகவில் சேர்த்துக் கொண்டவர் மோடி” என்றார்.
இதையும் படிங்க: "ஊழல் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மோடி" - மு.க.ஸ்டாலின் விமர்சனம் - Lok Sabha Election 2024