திருப்பூர்: பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் தேனி மாவட்டத்தில் தங்கி இருப்பதாக மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், அவரை இன்று கோவை அழைத்து வந்தனர்.
இதனிடையே காலை 7 மணி அளவில் தாராபுரம் வழியாக சவுக்கு சங்கரை ஏற்றிக் கொண்டு வந்த காவல்துறை வாகனம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த கார் மோதி விபத்தில் சிக்கியது. இதில் காரில் பயணித்த தாராபுரம் தெக்கலூரை சேர்ந்த லோகநாதன் உள்பட காவல்துறை வாகனத்தில் இருந்தவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் சவுக்கு சங்கருக்கு உதடு மற்றும் கால் முட்டியில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தாராபுரம் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: அழுகிய நிலையில் 3 சடலங்கள் கண்டெடுப்பு; கொலையா? தற்கொலையா? என விசாரணை..சேலம் அருகே பரபரப்பு!