மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கொடைக்கானலின் நட்சத்திர ஏரி முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக தாவரங்கள் அதிக அளவில் படர்ந்தும், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவை ஏரியில் வீசப்பட்டு மோசமான நிலையில் உள்ளது. நட்சத்திர ஏரிப்பகுதியில் கழிவறை வசதிகள் இல்லை.
கட்டண கழிப்பிடங்களையே பயன்படுத்த வேண்டி உள்ளது. சுற்றுலாப் பகுதியில் கழிவறை வசதி முறையாக செய்யப்பட்டிருப்பது அவசியமானது. ஏரியில் படர்ந்துள்ள ஹைட்ரில்லா தாவரங்களால், ஏரியில் தவறி விழுபவர்கள் உயிரிழக்கும் சூழல் உள்ளது. குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களிலும் கழிப்பிட வசதிகள் இல்லை.
கொடைக்கானல் ஏரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீரூற்று பகுதியைச் சுற்றி பாதுகாப்பு கட்டடம் எதுவும் அமைக்கப்படவில்லை. இவை தொடர்பாக நடவடிக்கைக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: அரசு அலுவலகங்களில் ஊழல்; அரசின் நிலைப்பாடு என்ன? - நீதிமன்றம் கேள்வி!
ஆகவே, கொடைக்கானலில் நட்சத்திர ஏரி, குணா குகை, தூண் பாறை, பைன் காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தள பகுதிகளில் போதுமான கழிவறைகளை அமைத்து சுத்தமாக பராமரிக்கவும், ஏரியில் படர்ந்துள்ள ஹைட்ரில்லா தாவரங்களை முழுவதுமாக அகற்றி, ஏரி தூய்மையாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு, "வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், கொடைக்கானல் நகராட்சியின் ஆணையர், கொடைக்கானல் வருவாய் மண்டல அலுவலர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.