சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் கடற்கரை நோக்கிச் செல்லும் நடைமேடையில், 20 வயது மதிக்கத்தக்க நபர் உடலில் ரத்தக் காயங்களுடன் கிடப்பதாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை செய்ததில், அந்த நபர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நடத்திய விசாரணையில், அந்த நபர் பழவந்தாங்கல் பகுதியில் ரத்தக் காயங்களுடன் ரயிலில் ஏறியது தெரிய வந்துள்ளது. மேலும், பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திருடச் சென்ற கடையில் ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சென்னை, பல்லாவரம் அடுத்த பொழிச்சலுார் மூன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முரளீதரன் (49). இவர் பழவந்தாங்கல், ஸ்டேஷன் சாலையில், ஸ்ரீவாரி வெல்த் சர்வீஸ் எனும் பெயரில் கடை நடத்தி வருகிறார்.
முரளீதரன், நேற்று (மார்ச் 15) தனது மகனின் பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்காக தனது கடையைப் பூட்டிச் சென்றிருந்துள்ளார். அதை நோட்டமிட்டுக் கொண்டிருந்த நபர் கடையை உடைத்து, உள்ளேயிருந்த கண்ணாடிக் கதவையும் உடைத்து புகுந்துள்ளார். பின்னர், அங்கு அவர் எதிர்பார்த்தது போல பணம் இல்லாமல், ரூபாய் 200 மட்டுமே இருந்துள்ளது. மேலும், அங்கு மக்கள் நடமாட்டம் அதிகரித்தது போலக் காணப்பட்டதால், வேகமாக வெளியேற முயன்றபோது வழுக்கி கீழே விழுந்ததில், அங்கு கிடந்த கண்ணாடி துண்டுகள் அவரின் வயிறு மற்றும் கைகளில் குத்தி உள்ளது.
அங்கிருந்து தப்பித்து ரயிலில் ஏறி கிண்டி வருவதற்குள் உடலில் உள்ள ரத்தம் அதிகப்படியாக வெளியேறியதால் மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்துள்ளது.
யார் வழக்கை எடுப்பது என்பதில் குழப்பம்: பழவந்தாங்கல் எல்லையில் சம்பவம் நடந்ததால் பழவந்தாங்கல் காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என ரயில்வே காவல்துறை தெரிவித்தனர். ஆனால், ரயில்வே எல்லையில் அந்த நபர் இறந்ததால், ரயில்வே காவல்துறைதான் விசாரிக்க வேண்டும் என பழவந்தாங்கல் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, ரயில்வே காவல்துறை இளைஞரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த நபர் யார் என்பது குறித்து ரயில்வே காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் புது பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த குரங்கு குணா (23) என்பதும், பெருங்களத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரையை விற்பனை செய்து வரும் நபர் என தெரிய வந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன? இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்!