திருச்சி: 108 வைணவ தலங்களில் முதன்மையாக விளங்குவது, பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வர். அவ்வாறு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, தங்களால் இயன்ற பொருட்களை காணிக்கைகளாகவும், ரூபாயாகவும் அளிப்பர். அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் முக்கிய மாதங்களில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இக்கோயிலுக்கு இன்று ( டிச 11) பரதநாட்டிய கலைஞரான ஜாகீர் உசேன், அரங்கநாதர் மேல் கொண்ட பக்தியால், வைர கிரீடத்தை கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோரிடம் காணிக்கையாக வழங்கியது பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க : திருச்சி மலைக்கோட்டை கார்த்திகை தீபத் திருவிழா: மெகா சைஸ் திரி கொப்பறையில் ஏற்றப்பட்டது!
அரங்கநாதரை தரிசனம் செய்ததற்கு பின்னர் ஜாகீர் உசேன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், "இது முழுக்க, முழுக்க ரத்தினத்தால் ஆனது. ஒரே ரூபி கல்லை குடைந்து செய்யப்பட்ட கிரீடம்.
இந்த கிரீடத்தில் 600க்கும் அதிகமான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஒரே கல்லில் ஆன மரகதம் பதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 200 வருடத்திற்கு பின் முதன்முறையாக வைர கிரீடம் கோயிலில் சமர்பிக்கப்படுகிறது.
பெருமாள் மீது கொண்ட பக்தியால் இந்த கிரீடம் செய்யப்பட்டது. இந்த கிரீடத்திற்கான கல்லை குடைந்து எடுத்தவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்த கிரீடத்தை செய்தது திருச்சியைச் சேர்ந்தவர். இதன் மதிப்பை சொல்ல விரும்பவில்லை.
இந்த கிரீடம் செய்ய ஏறத்தாழ 8 வருடங்கள் ஆனது. இதற்கான கல் கண்டுபிடிப்பதற்கு 3 வருடங்கள் ஆனது. இந்த கிரீடம் செய்வதற்கு தேவையான கல்லை கொடுத்தபோது அவர்கள் ஒரு நிபந்தனை போட்டார்கள். அது என்னவென்றால் இந்த கல்லை குடையும் ோது வெடித்துவிட்டால் அதற்கான மதிப்பை நாம் கொடுத்துவிட வேண்டும். கல்லை நாங்கள் ரிட்டன் எடுக்கமாட்டோம் என கூறினார்கள்.
ஆனால், பெருமாளின் அருளால் கல் வெடிக்கவில்லை. எங்கேயும் ஜாயிண்ட் இல்லாமல் கல்லை குடைந்து ஒரே கல்லினால் செய்யப்பட்டது. ரூபி மட்டும் 3,169 கேரட். எனக்கு அரங்கநாதரை பிடிக்கும் என்பதால் இதை செய்தேன்" என்று ஜாகீர் உசேன் கூறினார்.