அரியலூர்: மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவைச் சேர்ந்தவர் சித்திரை சோழன் கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா என்ற மனைவியும் ஐந்து மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் என ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். இவர்களது மூத்த மகளுக்கு 18 வயதாகும் நிலையில், திருமணமாகாமலேயே கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது பெற்றோர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர் அப்போது அன்புதுரை (21) என்பவருடன் பழகியதாகவும் அவர்தான் கர்ப்பத்திற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அன்புதுரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் அன்புதுரை, தான் கர்ப்பத்திற்குக் காரணம் அல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த மாதம் மார்ச் 29ஆம் தேதி சித்திரை சோழன்-பரிமளா தம்பதியின் மூத்த மகளுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தை பிறந்த செய்தி அறிந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், குழந்தையின் அங்க அடையாளங்களைப் பதிவு செய்து கொண்டு, வருகின்ற திங்கள்கிழமை (மே 6) டிஎன்ஏ பரிசோதனைக்குக் குழந்தையுடன் வரவேண்டும் என கூறி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28) நள்ளிரவு குழந்தையின் தாய் மற்றும் பாட்டி பரிமளாவும் குழந்தையைக் காணவில்லை என அலறியடித்துக் கொண்டு அன்று இரவே மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்படி, ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராமச்சந்திரன் மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் குழு அமைக்கப்பட்டு குழந்தையைத் தேடி வந்தனர்.
இத்தகைய சூழலில், குழந்தையின் தாய் வீட்டாரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, டிஎன்ஏ பரிசோதனைக்குப் பயந்து குழந்தையைக் கொன்று வீட்டிற்கு முன் பகுதியில் உள்ள பெரிய மடையான் ஏரிக்கரையில் ஓரத்தில் குழி தோண்டி அதில் குழந்தையைப் புதைத்து விட்டு நாடகம் ஆடியது தெரியவந்தது.
இதன் பின்பு போலீசார் குழந்தையின் தாய் உட்பட அவரது குடும்பத்தினர் ஐந்து பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து மேற்கொண்டனர். இதற்கிடையில், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ரகுமான் முன்னிலையில் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது, காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தையின் தாய் உட்பட அவரது குடும்பத்தினர் ஐந்து பேரையும் விசாரணைக்கு அழைக்கும் போது காவல் நிலையத்தில் ஆஜராகும்படி நிபந்தனை விதித்து விடுவித்துள்ளனர். மேலும், குழந்தையை தாய் மற்றும் அவரது குடும்பத்தினர் கொன்று புதைத்து விட்டு குழந்தையை காணவில்லை என்று நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆசையாக அழைத்து அல்வா கொடுக்க முயன்ற பெண்.. நெல்லையில் தொழிலதிபர் கடத்தலின் பின்னணி என்ன?