சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் ரெட்டி குப்பம் சாலையில் வசித்து வரும் தேன்மொழி என்பவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள். இதில், மகன் நிவாஸ் கிருஷ்ணன் என்பவர் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி வீட்டுக்கு மது குடித்துவிட்டு வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட சண்டையில் சகோதரிகளுடன் கோபித்துக் கொண்டு நிவாஸ் கிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்த நிவாஸ் கிருஷ்ணன் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையே, குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிவாஸ் கிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினர் இடையே அடிக்கடி இது போன்று சண்டை ஏற்பட்டுள்ளது.
அதுபோல கடந்த ஜூன் 25 தேதி சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நிவாஸ் சில நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது போன்று அடிக்கடி கோபித்துக் கொண்டு சில நாட்கள் வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்புவார் என நினைத்து உறவினர்கள் இருந்துள்ளனர்.
வழக்குப் பதிவு: இருப்பினும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீண்ட நாள் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் ஏற்பட்டு குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடியுள்ளனர். சம்பவத்தன்று நிவாஸ் கிருஷ்ணன் வீட்டின் அருகே நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர்ந்து தேடிய போலீசார், நிவாஸ் கிடைக்காததால் அதன் பின்பு வழக்கு கிடப்பில் போட்டுள்ளனர்.
இந்த நிலையில், காவல் நிலையத்திற்கு உறவினர்கள் அடிக்கடி சென்று நிவாசை தேடிக் கொடுக்குமாறு அணுகியுள்ளனர். ஒரு கட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள் தாங்களாகவே தேட ஆரம்பித்துள்ளனர். நண்பர்கள் சமூக வலைதளத்தில் நிவாஸின் புகைப்படத்தையும் பதிவிட்டு தேடியுள்ளனர். இந்நிலையில் தான் நிவாஸின் உறவினர்கள் மருத்துவமனைகளில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மருத்துவமனையாக விசாரித்துள்ளனர்.
தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாகியும் நிவாஸ் கிருஷ்ணன் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் உறவினர்கள் வேதனையுடன் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் உறவுகள் அறக்கட்டளை மூலமாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாக புகைப்படம் ஒன்றை நிவாஸ் கிருஷ்ணனின் உறவினருக்கு அனுப்பியுள்ளார்.
கையில் அணிந்திருந்த காப்பு: ரயிலில் அடிபட்ட காரணத்தினால் தலை, முகம் சிதைந்து இருக்கும் நிலையில் புகைப்படத்தை நிவாஸ் கிருஷ்ணனின் உறவினர்கள் பார்த்துள்ளனர். இறந்தவரின் உடைகளை வைத்தும், உடல் வாகு அடிப்படையாக வைத்தும் கையில் அணிந்திருக்கின்ற காப்பின் மூலமாக இறந்தது நிவாஸ் கிருஷ்ணன் தான் என உறுதி செய்தனர்.
இதனையடுத்து உடனடியாக ரயில்வே காவல் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரித்துள்ளனர். அப்போது கடந்த ஜூன் 25 ஆம் தேதி, காணாமல் போன அன்று இரவே நிவாஸ் வீட்டின் அருகே இருக்கும் ரயில்வே பாதையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அருகில் இருக்கும் சைதாப்பேட்டை காவல் நிலையத்திலும் மற்ற காவல் நிலையங்களிலும் இறந்தவர் குறித்து தகவல் கொடுத்ததாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு மாதத்திற்கு மேலாக உடலை யாரும் அடையாளம் காணாததால் மூலக்கொத்தளம் பகுதியில் அடக்கம் செய்து விட்டதாக காவல்துறை தெரிவித்ததைக் கேட்டு நிவாஸின் தாய் தேன்மொழி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தாய் தேன்மொழி கண்ணீர்: காணாமல் போன மறு நாளே வீட்டிலிருந்து அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்த மகனைப் பற்றி போலீசார் முறையாக விசாரித்து தகவல் கொடுக்காமல், 42 நாட்களாக எங்கேயாவது உயிரோடு இருப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த தங்களுக்கு, அடையாளம் தெரியாத ஆதரவற்ற உடல் என கூறி கடைசி நேரத்தில் கண்ணில் கூட பார்க்க முடியாமல் காவல்துறை அடக்கம் செய்துள்ளதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார் நிவாஸின் தாய் தேன்மொழி.
ரயிலில் அடிபட்டு இறந்தாலும் உடலுக்கு சொந்தக்காரர்கள் யார்? என்று முறையாகத் தேடாமல் அவசர அவசரமாக நிவாஸின் உடலை அடக்கம் செய்தது ஏன் என உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், காணாமல் போன நிவாஸ் அன்று இரவே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த காரணத்தினால் அவர் குடிபோதையில் ரயிலில் அடிபட்டு இறந்தாரா என காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்