ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன் - சாந்தி தம்பதியக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகன் தினேஷ் குமார் (27) பூ ஜோடிப்பு வேலை செய்து வருகிறார். கலவை கூட்டுரோடு கரிக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மற்றும் பரிமளா தம்பதியின் மகள் லாவண்யா என்பவருடன் கடந்த ஜூலை 9ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, தினேஷ் குமார், லாவண்யாவை அடிக்கடி தனியாக சந்தித்து வந்துள்ளார். அவருக்கு ஒரு செல்போனையும் வாங்கித் தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை 19ஆம் தேதி திடீரென லாவண்யாவை பிடிக்கவில்லை என்றும், தனக்கு திருமணம் வேண்டாம் என்றும் தினேஷ் குமார் கூறியதாக தெரியவருகிறது.
இது பெண் வீட்டார் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, இருவீட்டாரும் முறையிட்டு வந்தனர். இதற்கிடையில், தினேஷ் குமாருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகவல் லாவண்யாவின் குடும்பத்தினருக்கு தெரியவர, திருமணத்திற்கு நிச்சயம் செய்த நாளன்று தினேஷ் குமாரின் வீட்டுக்கு பெண்ணுடன் வந்து முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தினேஷ்குமார் வீட்டில் தற்கொலைக்கு முயன்ற நிலையில், ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை அடுத்து, லாவண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு திரண்டனர்.
பின்னர், அங்கு தினேஷ் குமாரின் வீட்டாரோடு பேச்சுவார்த்தை நடத்தி, தினேஷ் குமாருக்கும், லாவண்யாவுக்கும் மருத்துவமனை வளாகத்தில் வைத்தே அதிரடியாக திருமணம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து, தினேஷ் குமார் மேல்சிகிச்சைக்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பிறகு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நபரை, நிச்சயம் செய்த பெண்ணுடன் மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: அதிகரிக்கும் BTS ஆர்மி! கொரிய மொழி கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டும் இளசுகள்!