திருநெல்வேலி: நெல்லை டவுன், புட்டாரத்தி அம்மன் திருக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரகு. கூலித் தொழிலாளியான இவர் மீது, கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவம் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது நெல்லை டவுன் காவல் நிலையத்தில், இவர் மீது சரித்திரப் பதிவேடு உருவாக்கப்பட்டு, போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து வருகிறார்.
மேலும் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் புலித்துரை என்பவருக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்திலும் வழக்கு விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக புலித்துறை தரப்பிற்கும், ரகு தரப்பிற்கும் பிரச்னைகள் தீவிரமாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரகுவின் மனைவி டவுன் காவல் நிலையத்தில் தனது கணவரை துப்பாக்கியைக் காட்டி வழக்கறிஞர் புலித்துரை தரப்பினர் மிரட்டுவதாக கூறி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்தில் வழக்கறிஞர் தரப்பினரை அழைத்து விசாரித்தபோது, சமரசமாக நாங்கள் சொல்கிறோம் என தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர். ஆனால் இதனை ஏற்க மறுத்து, ரகு குடும்பத்தினர் காவல் நிலையத்தில் காலையிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இரு தரப்பையும் சமரசமாகச் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தியதைக் கண்டித்து, நெல்லை டவுன் காவல் நிலையத்திலிருந்து குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க ரகு மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் என குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளனர். அப்போது மாவட்ட ஆட்சியர் இல்லாததால், மனுவினை அதிகாரிகளிடம் அளித்துச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதனை ஏற்க மறுத்து, ரகு கையில் கத்தியால் கிழித்துக் கொண்டு, குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்துள்ளனர். அப்போது மருத்துவமனைக்குச் செல்ல மறுத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, காவல்துறையினர் ரகு மற்றும் அவரது குடும்பத்தினரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.