தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை பகுதியைச் சேர்ந்தவர் மீரான்(47). இவர், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் பானி பூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 16) வழக்கம்போல் வியாபாரம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் தன்னுடைய வீட்டு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் உள்ளப் பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்ற இளைஞர் சொகுசு காரில் வேகமாக வந்து வீட்டின் முன் நின்றுக் கொண்டிருந்த மீரான் மீது மேதியுள்ளார். இதில், 10 மீட்டர் தூரம் வரை மீரான் தூக்கி வீசப்பட்டார்.
இதனைப் பார்த்த அவரது மனைவி அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தார். அதற்குள் காரை எடுத்துக் கொண்டு இம்ரான் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதனையடுத்து மீரானை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்க்கலாம் என முற்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து தட்டார்மடம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்ற உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மீரான் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளியை வலைவீசித் தேடிவருகின்றனர். மேலும், இந்த வழக்கில் இம்ரானின் நண்பரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பகுதியில் டிரக்கிங்.. ட்ரோன் கேமரா உதவியுடன் 300 அடி பள்ளத்தில் சடலமாக மீட்பு!