கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கதிர்மதியோன். சமூக ஆர்வலராக திகழும் இவர், நுகர்வோர் தொடர்பான பல்வேறு வழக்குகளை தொடுத்துள்ளார். முன்னதாக, கடந்த 1996ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்தபோது, மின்வாரிய அதிகாரிகள் ரூ.500 லஞ்சமாக கேட்டதை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பின்னர், ரசாயனம் தடவிய நான்கு 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு 50 ரூபாய் நோட்டுகள் என அந்த அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த அதிகாரியை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கில் சாட்சியமாக கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நிறைவடைந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவர் வழங்கிய 500 ரூபாய் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, நீதிமன்றத்தில் ஆஜரான கதிர்மதியோனிடம், அவர் வழங்கிய 500 ரூபாய் பணத்தை 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் இணைப்பிற்காக 1996ஆம் ஆண்டு கதிர்மதியோன் அரசு அதிகாரிக்கு வழங்கிய ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 1996-ல் கோவை கணபதி பகுதியில் உள்ள என்னுடைய வீட்டிற்கு மின் இணைப்பிற்காக விண்ணப்பித்திருந்தேன்.
அப்போது, அதற்கான கட்டணம் 100 ரூபாய் தான். ஆனால், அப்போது பொறுப்பில் இருந்த அதிகாரி 400 ரூபாய் சேர்த்து தரச் சொன்னார். எனக்கு லஞ்சம் தர மனம் இல்லாததால், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தேன். அதன் அடிப்படையில், என்னிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, லஞ்சம் கேட்ட அதிகாரியை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர், இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாட்சிக்காக நான் வழங்கிய ரூபாய் நோட்டுகளும் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கு என்ன ஆனது என்பதே எனக்கு தெரியாமல் போனது. இந்த நிலையில், வழக்கு முடிந்து விட்டதாகவும், நான் வழங்கிய பணத்தை பெற்றுக் கொள்ளுமாறும் நீதிமன்றத்தில் இருந்து கடிதம் வந்தது.
அதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்த பணத்தை தற்போது பெற்றுள்ளேன். சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு லஞ்சமாக கொடுத்த பணம் திரும்ப கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நீதித்துறையின் இந்த தாமதம் சற்று கவலை அளிக்கிறது. லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க பெரும்பாலானவர்களும் தயங்குவதற்கு இதுவே காரணமாக அமைந்து விடுகிறது.
தங்கள் சொந்த பணத்தைக் கொடுத்துவிட்டு, அதனை திரும்பப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறை விரைவாக பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஓராண்டாக சிறையில் செந்தில் பாலாஜி.. 2023 ஜூன் 14 முதல் 2024 ஜூன் 14 வரை வழக்கின் பாதை