கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள தேவராயபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (36). இவர் தனியார் இருசக்கர வாகன உறுதி பாகங்கள் நிறுவனத்தில் மண்டல அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள், எல்.கே.ஜி படிக்கும் மகன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இவர் அலுவலகப் பணியாக பெங்களூருக்கு சென்றிருந்தார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) அதிகாலை அங்கு இருந்து கோவைக்கு ரயில் மூலம் வந்து, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தொண்டாமுத்தூர் தேவராயபுரத்தில் உள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார்.
அப்போது, பேரூர் அடுத்த தீத்திபாளையம் அருகே நடந்து வரும் மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார்த்திகேயன் விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்துள்ளது. இதனையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இதுகுறித்து சாலையில் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் பேரூர் காவல் துறையினர் வந்து, அவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது அவசர, அவசரமாக நெடுஞ்சாலைத் துறையினர் அந்த சாலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையில் மணல்களை நிரப்பி தடுப்புகளை அமைத்து வருகின்றனர். உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பே இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு இருந்தால் விபத்து நடந்து உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என கார்த்திகேயனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
அதேநேரம், நெடுஞ்சாலைத் துறையினர் எந்த ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள், தடுப்புகள் அமைக்காமல் சாலையின் நடுவே மேம்பாலம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டி பணி நடைபெற்று வந்ததாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே கார் - லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்