சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதியின் உள்பகுதியில் இருந்து வங்கதேசத்தைச் சேர்ந்த ஷா ஆலம் (46) என்பவர் வெளியே வர முயன்றுள்ளார். அப்போது கேட்டில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் ஷா ஆலம், தான் ஏர் ஏசியா விமானத்தில் சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்ல விமான நிலையத்துக்குள் சென்றேன். ஆனால், எனது விமான பயணத்தை தற்போது ரத்து செய்துவிட்டு வெளியில் வருகிறேன் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து சந்தேகமடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள், ஷா ஆலம் கையில் இருந்த விமான டிக்கெட்டை வாங்கி சோதித்துள்ளனர். அந்த விமான டிக்கெட் ஷா ஆலம் பெயரில், சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு, ஏர் ஏசியா விமானத்தில் பயணிப்பதற்கான டிக்கெட்டாக இருந்துள்ளது. ஆனால், இவர் பயணத்தை ரத்து செய்து, ஆப்லோடாகி வெளியில் வந்தால், குடியுரிமை மற்றும் ஏர் ஏசியா விமான நிறுவனம் பயணி ஆப்லோடு என்று முத்திரைகள் குத்தியிருப்பார்கள்.
அதுபோன்ற எந்த முத்திரைகளும், இந்த விமான டிக்கெட்டில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தில், வங்கதேச நபர் ஷா ஆலத்தை, ஏர் ஏசியா விமான நிறுவன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். பிறகு அந்த விமான டிக்கெட்டை ஆய்வு செய்தபோது, அதே பிஎன்ஆர் எண்ணில் உள்ள டிக்கெட்டில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னையில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு ஏர் ஏசியா விமானத்தில், கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளது தெரிய வந்தது.
அதோடு ஷா ஆலம் வைத்துள்ள விமான டிக்கெட் கலர் ஜெராக்ஸ், அதாவது போலி விமான டிக்கெட் என்றும் தெரிய வந்துள்ளது. அசல் விமான டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து, அதில் மிகவும் நுட்பமாக, ஏற்கனவே இருந்த பயணியின் பெயரை நீக்கிவிட்டு, ஷா ஆலம் என்ற பெயர் பதிவிட்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, வங்கதேச நபர் ஷா ஆலமை வெளியில் விடாமல், விமான நிலையத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
அதோடு பாதுகாப்பு அதிகாரிகள், குடியுரிமை அதிகாரிகள், விமான நிலைய மற்றும் விமான நிறுவன அதிகாரிகள், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், தீவிரவாதிகளைக் கண்காணிக்கும் கியூ பிரிவு போலீசார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஷா ஆலம், டெல்லியில் தங்கி வேலை செய்கிறார் எனவும், இந்த நிலையில் அவருடைய உறவினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவரை பார்ப்பதற்காக, மற்றொரு உறவினருடன் ஷா ஆலம், டெல்லியில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார்.
இப்போது அந்த உறவினர் சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரை வழியனுப்புவதற்காக ஷா ஆலம், சென்னை விமான நிலையத்திற்குள் செல்வதற்காக, அந்த உறவினரின் ஒரிஜினல் விமான டிக்கெட்டை, இதேபோல் கலர் ஜெராக்ஸ் எடுத்து, அதில் தனது பெயரை மட்டும் இணைத்துக் கொண்டு, அந்த போலி விமான டிக்கெட் மற்றும் தனது பாஸ்போர்ட் ஆகியவற்றுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
மேலும், புறப்பாடு பகுதி கேட்டில் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த போலி டிக்கெட்டை காட்டிவிட்டு, விமான பயணி போல் நடித்து உள்ளே சென்றுள்ளதும், அதன்பின்பு, உறவினரை விமானத்தில் ஏற்றி அனுப்பி விட்டு, இவர் உடனடியாக வெளியில் திரும்ப முடியாமல், உள்ளேயே நீண்ட நேரம் சுற்றிக்கொண்டு இருந்தும், அதன் பின்பு வெளியில் திரும்பும்போது சிக்கிக் கொண்டதும் தெரிய வந்தது.
இருப்பினும், ஷா ஆலம் கூறுவது உண்மைதானா, ஏர் ஏசியா விமானத்தில் உண்மையான விமான டிக்கெட்டில் கோலாலம்பூர் சென்ற பயணி யார், இந்த போலி விமான டிக்கெட் மோசடியில், அவருக்கும் தொடர்பு உள்ளதா, இவர்களின் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் நேற்று இரவு வரை தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்பு, பாதுகாப்பு அதிகாரிகள், ஷா ஆலமை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார், ஷா ஆலமை கைது செய்து, மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர், போலி விமான டிக்கெட்டை வைத்து சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதி கேட்டில், பாதுகாப்பு அதிகாரிகளிடம் காட்டிவிட்டு, விமான பயணி போல் நடித்து, விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட உள்பகுதிகளுக்குள் சென்று, நீண்ட நேரம் கழித்து மீண்டும் வெளியில் வரும்போது, பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் விமான பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ககன்யான் மூலம் விண்ணில் பறக்கப் போகும் இந்தியர்கள் இவர்கள் தான்!