வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(41), நெசவுத் தொழிலாளியான இவருக்கு ரேவதி(35) என்பவருடன் திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். அதில் இரண்டு மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்ட நிலையில், 3வது மகள் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் ரேவதி சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுவது தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, இவர்களுக்குள் குடும்பத்த தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தால், ஆத்திரமடைந்த சேகர் ரேவதியைக் கண்டித்ததாகவும், அதனால் இருவர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதில், ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அரிவாள்மனையால் ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார். அப்போது சப்தம் கேட்ட வந்த அக்கம்பக்கத்தினர், கையில் பலத்த காயமடைந்த ரேவதியை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த குடியாத்தம் நகர போலீசார், சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.