புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த 25 வயது பெண்ணின் புகைப்படத்தை, லோகாண்டோ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது சம்பந்தமாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
இதன்படி, புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா ஆண்கள் சிலர், லோகாண்டோ வெப்சைட்டில் பாண்டிச்சேரி என்று தேடி, அதில் உள்ள புகைப்படத்தைத் தேர்வு செய்து தொடர்பு கொண்டு, பணத்தைக் கட்டி ஏமாந்து உள்ளனர் என தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக காரைக்குடியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை புதுச்சேரி சைபர் கிரைம் ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் காவலர்கள் மணிமொழி, அருண்குமார், அரவிந்தன் ஆகியோர் கைது செய்து, தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் முன் ஆஜர்படுத்தி, மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி புதுச்சேரி இணைய வழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் அனைவரும் பார்க்கும் விதமாக தங்களது புகைப்படத்தைப் பதிவிட வேண்டாம் என கல்லூரி மாணவிகள் உள்பட பெண்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உங்களுடைய புகைப்படத்தை திருடி லோகாண்டோ இணையதளம் போன்ற பல இணையதளங்களில் இணைய வழி குற்றவாளிகள் தவறாக பதிவிடுவார்கள் எனவும், ஆகையால் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சங்கரன்கோவில் அருகே பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்து.. ஒருவர் பலி!