ஈரோடு: ஈரோடு வீ.வீ.சி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சண்முகம்(72), செல்வி(63) தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் திருமணமாகி கணவர் வீட்டில் உள்ளனர். இவர்கள் தங்களிடம் உள்ள கடைகளையும், வீடுகளையும் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவ்விருவருக்கும் வயது மூப்பு காரணமாக ஏற்படும் கை கால்கள் வலியை சரிசெய்ய வேண்டும் என வீட்டின் அருகே உள்ள பெண் ஒருவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்ற சாமியாரை வரவழைத்து வீட்டில் பூஜை செய்தால், அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் எனக் கூறி இவர்களது வீட்டிற்கு அந்த சாமியாரை அழைத்து வந்துள்ளார்.
மேலும், இந்த பரிகாரம் தொடர்பாக உறவினர்கள் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும், பரிகாரத்தை உடனடியாக செய்ய வேண்டும், அதற்கு பால் உள்ளிட்ட பொருட்கள் வேண்டும் என்றும், பூஜை முடிந்த பின் அந்த பாலை நீங்கள் இருவரும் பருகினால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் எனக் கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, சாமியார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் பரிகார பூஜையை வைத்துக் கொள்ளலாம் எனக் கூறியதால், வயதான தம்பதியினரும் பூஜைக்கு வேண்டியவற்றை ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது, சாமியார் பெருமாளோ ஊமத்தங்காயை பால் அருகே வைத்து பூஜை செய்துள்ளார். பின்னர் அந்த பாலில் ஊமத்தங்காயின் பாதி பகுதியை அரைத்து, பாலில் கலந்து தம்பதியினரை குடிக்கச் சொல்லியுள்ளார்.
அதனை நம்பிய வயதான தம்பதியினரும் பாலை குடித்துள்ளனர். ஆனால், ஊமத்தங்காய் கலந்த பாலைக் குடித்த அடுத்த நொடியில் இருவரும் மயங்கியுள்ளனர். பின்னர், அந்த சாமியார் பெருமாள் அவர்கள் அணிந்திருந்த தாலிக் கொடி, மோதிரம் உள்ளிட்ட 9 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மயக்கம் தெளிந்து பார்த்த இருவரும், தாங்கள் போலி சாமியாரால் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது தொடர்பாக, நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி சாமியாரை வலைவீசித் தேடிவந்தனர். ஆனால் போலி சாமியாரோ, போலீசில் சிக்காமல் இருக்க போலீசாரின் உடை அணிந்து சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், காவல் நிலைய ஆய்வாளர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, போலீசார் உடை அணிந்து காவல்துறைக்கு சம்பந்தம் இல்லாமல் ஒருவர் சுற்றித்திரிவது தெரிய வந்துள்ளது. அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது, அவர் போலீசார் தீவிரமாகத் தேடிவந்த போலி சாமியார் பெருமாள் என்பது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பரிகாரம் செய்வதாக கூறி வயதான தம்பதியினரிடம் இருந்து திருடிய 9 சவரன் நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், போலி சாமியார் பெருமாள் மீது ஏற்கனவே கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தையிடம் இருந்து நகைகளை திருடிய சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஒரு வழக்கு உள்ளதும் தெரியவந்ததுள்ளது.
தற்போது ஈரோட்டில் பரிகாரம் செய்வதாகக் கூறி வயதான தம்பதியினருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு: சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் ரகசிய விசாரணை