சேலம்: சேலம் ரயில்வே உட்கோட்டத்துக்குட்பட்ட கோயம்புத்தூர், ஈரோடு, மயிலாடுதுறை மற்றும் தூத்துக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சேலம், தருமபுரி மற்றும் ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் ரயில்களில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் பெண்களிடம் மர்ம நபர்கள் செயின் பறிக்கும் சம்பவம் நடைபெற்று வருகின்றன.
செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களைப் பிடிப்பதற்காக தமிழ்நாடு ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதாவின் உத்தரவுபடி, சேலம் ரயில்வே காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தேவராஜன் அடங்கிய தனிப்படையினர், ஓடும் ரயிலில் நகைப் பறிப்பில் ஈடுபடும் நபர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், சேலம் ரயில் நிலையத்தில் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவரிடம், வடமாநில நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி இரண்டு சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், சேலம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் எதிரே உள்ள நட்சத்திர உணவு விடுதி அருகே சந்தேகப்படும்படி வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது, ஒடிசா மாநிலம் கந்தமாலா மாவட்டத்தைச் சேர்ந்த பின்னட்நாயக் (33) என்றும், அவர் 2 சவரன் நகையைப் பறித்ததும் தெரிய வந்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் சேலம், ஓசூர், தருமபுரி, ஈரோடு, கோவை ஆகிய ரயில் நிலையங்களில் இவர் மீது 7 வழக்குகள் இருப்பதும், குறிப்பாக சேலம், தருமபுரி, ஓசூர் வழியாகச் செல்லும் ரயில்கள் மலைப்பாதைகளில் மெதுவாக ரயில் செல்லும் போது வட மாநில இளைஞர் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் பெண்களை நோட்டமிட்டு, நகையை பறித்துக் கொண்டு தப்புவதும் தெரிய வந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரிடம் இருந்து 12 லட்சம் மதிப்புள்ள 24 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வட மாநிலத்தவரை சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்! - Vijayakanth Memorial World Record