கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே உள்ளது லிங்காபுரம் கிராமம். வனப்பகுதிக்கு அருகே உள்ள இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உதயகுமார் என்பவர் தனது வீட்டின் காம்பவுண்டுக்குள் செட் அமைத்து அதில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு உதயகுமார் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்திருந்த போது, அருகில் இருந்த வனப்பகுதிக்குள் இருந்து வந்த சிறுத்தை ஒன்று அவரது ஆடு ஒன்றை வேட்டையாடி இழுத்துச் சென்றது. இதனைக் கண்ட உதயகுமார், வனத்துறை சோதனை சாவடி சென்று, வன ஊழியர்களை தேடி உள்ளார் ஆனால் அங்கே ஆட்கள் யாரும் இல்லாததால், பின்னர் தொலைபேசி மூலம் தகவல் அளித்து அவர்களை வரவழைத்து உள்ளார்.
இதையும் படிங்க: செம பசி பாஸ்..! அரிசியுடன் பிளாஸ்டிக் கவரை சாப்பிட்ட யானை வீடியோ!
அங்கு வந்த வனத்துறையினர் சோதனை செய்த போது, சிறுத்தையின் கால் தடங்கல் மற்றும் சிறுத்தை இழுத்துச் சென்ற அடையாளங்கள் தென்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இது மாதிரியான சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்பொழுது ஊருக்கு மத்தியில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து, சிறுத்தை ஆட்டை வேட்டையாடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகே 500 மீட்டர் தொலைவில் அரசு தொடக்கப் பள்ளியும் செயல்பட்டு வரக்கூடிய நிலையில், பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள அந்த சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்