ஈரோடு: ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைக்கிராம மக்கள் மானாவாரி பயிரான சோளம், ராகி, மரவள்ளிக்கிழங்கு விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பது ஆகியவற்றை தொழிலாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பாக, தாளவாடி வனத்திலிருந்து வெளியே வந்த சிறுத்தை, அங்குள்ள கல்குவாரியில் பதுங்கிக் கொண்டு, இரவு நேரத்தில் கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதுவரை 10க்கும் மேற்பட்ட ஆடுகள், மாடுகளையும் வேட்டையாடி உள்ளது. அது மட்டுமில்லாமல், நாய்களையும் கடித்துக் குதறி உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சிறுத்தையின் அச்சுறுத்தல் காரணமாக, ஆடு, மாடுகளை வளர்க்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம் எனவும், சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில், தாளவாடி வனத்துறையினர் நேற்று (ஏப்.25) தர்மாபுரம், மல்கொத்திபுரம் ஆகிய இடங்களில் கூண்டு வைத்து, அதில் நாய்களைக் கட்டி வைத்து சிறுத்தையை எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளனர். இந்நிலையில், இன்று (ஏப்.26) அதிகாலை தர்மா புரம், சிவசுப்பிரமணியம் தோட்டத்தில் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியுள்ளது.
இதனையடுத்து அங்கு வந்த கால்நடை மருத்துவர், சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தபோது, சிறுத்தை நல்ல நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுத்தை சிக்கிய தகவலைக் கேட்ட கிராம மக்கள் சிறுத்தையைப் பார்க்க ஆர்வத்துடன் வந்தனர்.
ஆனால், வனத்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, சிறுத்தையை வேறு இடத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். பிடிபட்ட சிறுத்தையை மீண்டும் தாளவாடி பகுதியில் விடக்கூடாது என்றும், தெங்குமரஹாடா வனத்தில் விடுவிக்க வேண்டும் எனவும் தாளவாடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: “தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துக” - தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்! - Labors Work Pattern In Summer