சேலம்: மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கண்ணாமூச்சி உப்புகல்லூர் கிராமப் பகுதியில், கொளத்தூர் ஒன்றிய திமுக முன்னாள் பொறுப்பாளர் தவசிராஜா, திராவிடர் விடுதலைக் கழகம் ஈஸ்வரன் உள்ளிட்டோர் நூற்றுக்கும் மேற்பட்ட அடியாட்களுடன் சென்று விளை நிலத்தில் இருந்த வாழைகளை முழுமையாகச் சேதப்படுத்தி மூதாட்டி மற்றும் சிறுமியைத் தாக்கிய சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், திமுக பிரமுகர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர் எனவும், இந்த சம்பவம் நடைபெற்ற 5 மணி நேரம் ஆன பின்பும் போலீசார் இதுவரை தாக்குதல் நடைபெற்ற இடத்திற்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான மூதாட்டி மற்றும் சிறுமி இருவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "40 வருடங்களுக்கு மேலாகக் கண்ணாமூச்சி உப்புகல்லூர் கிராமத்தில் எங்கள் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம்.
இந்த நிலையில், கொளத்தூர் திமுக முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் தவசிராஜா, திராவிடர் விடுதலைக் கழக பிரமுகர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் எங்கள் விவசாய நிலத்தை அபகரிக்க முடிவு செய்து, இன்று நூற்றுக்கு மேற்பட்ட அடியாட்களுடன் வந்து எங்களை வீட்டை விட்டு வெளியே வரும்படி மிரட்டினர்.
இதையடுத்து, அவர்களைத் தட்டிக்கேட்ட எனது பாட்டி மற்றும் எனது தங்கையை அடித்து, உதைத்து மண்டையை உடைத்து விட்டனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல எனது சித்தப்பாவைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று வாழைத்தோப்பு வழியாக விரட்டி அடித்தனர்.
உயிருக்குப் பயந்து இன்று காலை முதல் நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியேறி மேட்டூர் அரசு மருத்துவமனையில் தஞ்சம் அடைந்து இருக்கிறோம். தகவல் தெரிவித்தும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை, எங்களிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணையும் நடத்தவில்லை. மேலும், எங்களது புகாரையும் போலீசார் ஏற்கவில்லை. எனவே, எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துத் தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: கோடைக் காலத்தில் குடிநீர் பிரச்சனையா?.. சேலம் மக்கள் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண் அறிவிப்பு!