திருப்பூர்: கோயம்புத்தூர் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ரகுராம் என்பவர் கடந்த 21ம் தேதி கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசுப் பேருந்தை பயணிகளுடன் இயக்கி வந்தார்.
அப்போது திருப்பூர் காந்திநகர் சிக்னல் பகுதியை பேருந்து கடந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பேருந்தை நிறுத்தி, ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி பேருந்தில் ஏறி ஓட்டுநர் மடியில் அமர்ந்து பேருந்தை இயக்கவிடாமல் அவருடன் தகராறு செய்தார்.
இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்த சிக்னலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து வெளியேற்றினார். பின்னர் இதுகுறித்து ஓட்டுநர் ரகுராம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க : அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்! யாரெல்லாம் பங்கேற்கலாம்? -முழு விபரம் உள்ளே!
அந்த விசாரணையில், தகராறில் ஈடுபட்ட நபர் திருப்பூர் தனியார் பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வந்த பிரதீப் என்பது தெரியவந்தது. பிரதீப் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஓட்டுநர் பேருந்தை மோதுவது போல இயக்கியதால் ஓட்டுநரிடம் முறையிட்டதாக போலீசாரிடம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். பேருந்து ஓட்டுநர் மடியில் அமர்ந்து பிரதீப் தகராறு செய்தபோது அங்கிருந்த நபர் ஒருவர் அந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்