சென்னை: சென்னையில் வளர்ப்பு மற்றும் தெருநாய் கடி சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகி வருகின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை நாய்கள் கடிப்பது வழக்கமாகியுள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளியான குமார்(35) என்பவரை வெறிநாய் ஒன்று காலில் கடித்துக் குதறியுள்ளது.
அதாவது பணியை முடித்துவிட்டு கேசுவலாக நடந்து சென்றுகொண்டிருந்த அவரை, அவ்வழியாக ஓடிவந்த நாய் ஒன்று திடீரென காலில் கடித்துள்ளது. இதில், நிலைகுலைந்த குமாருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது, அவருக்கு நாய்க்கடிக்கான ஊசிகள் போடப்பட்டு, சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நாய் குமாரைக் கடிப்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட குமார் என்பவர் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திடம் அளித்த பேட்டியில், "நான் வேலை முடிந்து மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென வந்த வெறிநாய் ஒன்று பின்னால் இருந்து எனது காலை கடித்துக் குதறியது. அந்த நாய் வந்ததைக்கூட நான் கவனிக்கவில்லை. அதற்குள் என்னைக் கடித்துவிட்டது. என்னை மட்டுமின்றி கோயம்பேடு சந்தையில் மேலும் 5 பேரை அந்த நாய் கடித்திருக்கிறது.
எனவே அந்த நாயை உடனடியாக மாநகராட்சியினர் பிடிக்க வேண்டும். கூலித்தொழிலாளியான எனக்கு நாய் கடித்ததில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவச் செலவுகளும் அதிகரித்துள்ளன. எனவே அரசு எனக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ராக்கெட் ராஜா வாகனத்தில் ஏறிய காவல்துறை அதிகாரி.. எஸ்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை!