திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் பகுதியில் எருமை மாட்டின் மீது அமர்ந்து பயணிக்கிறார் 62 வயதான ராஜா. இப்பகுதி மக்களுக்கு இது அன்றாடம் பார்க்கக் கூடிய காட்சி தான். நமது ஈடிவி பாரத் திருப்பத்தூர் செய்தியாளர் அரவிந்தன் ராஜாவை அணுகிய போது, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மூன்று சக்கர வாகனம் கேட்டு ஊராட்சி மன்ற நிர்வாகிகள் முதல் மாவட்ட ஆட்சியர், அரசுத் துறை அதிகாரிகள் வரை மனு அளித்தும், இதுவரையில் மூன்று சக்கர வாகனம் கிடைக்கவில்லையென மிகுந்த மன வேதனையோடு தெரிவிக்கிறார்.
எனக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர வாகனம் வேண்டுமென்று அரசு அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. 50 சதவீதம் ஊனம் இருந்தால் சக்கர நாற்காலி கொடுப்போம் என்றனர். என்னை சோதித்து பார்த்த போது 56 சதவீதம் இருந்தது. இருப்பினும் எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார். மேலும் உடனடியாக அரசு அதிகாரிகள் தனக்கு சக்கர நாற்காலி மற்றும் உதவிகள் வழங்கிட வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது பற்றி ராஜா கூறுகையில், பிறந்து 10 மாதத்தில் இருந்தே இப்பிரச்சினை உள்ளது. என்னிடம் சக்கர நாற்காலி, மூன்று சக்கர வாகனம் ஏதும் இல்லாததால் நான் வளர்க்கும் எருமை மாட்டின் மீது பயணம் செய்து எனது தேவைகளை நிறைவேற்றி கொள்கிறேன். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை மட்டும் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட தொலைவிற்கு மேல் நடக்க ராஜா அதிக சிரமப்படுவதால், மருத்துவமனை, கடைவீதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, தான் வளர்க்கும் கால்நடையான எருமை மாட்டின் மீது பயணம் செய்து தனது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறார்.
ராஜாவின் மகன் ராஜேந்திரன் கூறுகையில், எனது அப்பாவால் வெகு தூரம் நடக்க முடியாது. வெளியில் செல்ல வேண்டுமென்றால், வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும். எப்போதும் மற்றவரை சார்ந்து இருக்கக்கூடாது என்பதற்காக அவர் வளர்க்கும் எருமை மாட்டின் மீது பயணம் செய்கிறார். அரசிடம் மனு கொடுத்து மூன்று வருடங்கள் ஆன போதும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் தாயார் இறந்துவிட்டார். பிழைப்புக்காக நாங்கள் வெளியூரில் வசிக்கிறோம். தனியாக வசிக்கும் எங்களின் தந்தைக்கு அரசின் உதவி தேவை என கோரிக்கை விடுத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: இந்த வருஷம் எந்த ட்ரெண்டிங்கில் விநாயகர்? சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்! - VINAYAGAR idols MAKING