கோயம்புத்தூர்: கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவனைத் தரிசிக்கச் சென்ற சென்னை அம்பத்தூரை சேர்ந்த நபர், மலை ஏறிக்கொண்டிருந்தபோதே உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மலையேறிய 5 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று (மார்.30) மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கைலாயம் என அழைக்கப்படும் கோவையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். ஏழு மலைகளைத் தாண்டி சுயம்பு வடிவில் உள்ள சிவலிங்கத்தைத் தரிசிக்க ஒவ்வொரு ஆண்டு பக்தர்கள் கூட்டம் அலைமோது.
அந்த வகையில் இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரகுராமன் என்பவரும் நேற்று (மார்.30) வெள்ளியங்கிரி மலையில் ஏறியுள்ளார். அப்போது ஐந்தாவது மலையில் சீதை வனம் அருகே சென்றுகொண்டிருந்த போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவருடன் சென்றவர்கள், வனத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் அங்குச் சென்ற வனத்துறையினர், அவரை மீட்டு, அங்கிருந்து பூண்டி அடிவாரப் பகுதிக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வந்துள்ளனர். கீழே வந்ததும் மருத்துவர்கள் ரகுராமனைப் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஆலந்துறை காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்விற்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முன்னதாக மலை ஏறிய பக்தர்கள் 5 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் ஏழு மலை ஏறி சிவனைத் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.