சென்னை: மத்திய பாஜக அரசு, கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. அதனை இந்தியா முழுவதும் படிப்படியாக அமல்படுத்தி வந்த நிலையில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையாக எதிர்த்தது.
மேலும், இந்த கொள்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் தமிழ்நாட்டிற்கு எதிர்ப்பாக இருப்பதால், அதனை ஏற்க முடியாது எனவும், தமிழ்நாட்டிற்கு என்று பிரத்யேகமாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் குழு அமைத்து, ஓராண்டுக்குள் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதன்படி, 2022 ஜூன் 1ஆம் தேதி அமைக்கப்பட்ட முருகேசன் தலைமையிலான இக்குழுவில், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். பொதுமக்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரிடம் இருந்தும், கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்று, முருகேசன் தலைமையிலான குழு அறிக்கையை உருவாக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டது.
ஓராண்டுக்குள் பணி முடியாத நிலையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு, அதன் பிறகு 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிக்கை இறுதி செய்யப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டன. இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால் குழுவின் அறிக்கையை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறையின் அதிகாரிகள் அதில் உள்ள அம்சங்களையும் ஆய்வு செய்துள்ளனர்.
தற்போது, மாநில கல்விக் கொள்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையிலான குழு இன்று தனது அறிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை மீது கருத்து கேட்ட பின்னர் அரசு மேல் நடவடிக்கையில் ஈடுபடும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து 2021 - 22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் "தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்" என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, தில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் த.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அக்குழு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது.
இந்நிகழ்வின் போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, குழுவின் உறுப்பினர்கள் பேராசிரியர் இராம சீனுவாசன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், முனைவர் அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், துளசிதாசன், டி.எம்.கிருஷ்ணா, இரா.பாலு, முனைவர் ஃப்ரீடாஞானராணி, பேராசிரியர் பழனி, குழுவின் உறுப்பினர் செயலர் ஏ.கருப்பசாமி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 65.48 அடியாக உயர்வு!