தென்காசி: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பல்வேறு வகைகளில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திமுக அரசின் சாதனைகள், நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவைகளை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. கடையநல்லூர் சுற்றுவட்டாரத்தை பொருத்தவரை திமுக 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு அணியினர் மட்டும் இந்த பிரச்சார கூட்டத்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பிரச்சார கூட்டம் நிறைவடைந்து கட்சியினர் அனைவரும் தேநீர் அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வருகை தந்த மற்றொரு பிரிவினர் கூட்டத்தை தங்களுக்கு தெரிவிக்காமல் எவ்வாறு நடத்தலாம் என கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரு பிரிவினர் கடையநல்லூர் நகராட்சியில் முன்னாள் கவுன்சிலரான வாப் என்பவரை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் தற்போது கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை திமுக பல அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருவதாகவும் அவ்வப்போது மோதல்களும் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில், இதனை திமுகவின் மேலிடம் கண்டு கொள்ளுமா என்ற கேள்வி ஒரு சில திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சர் கொடுத்த விளம்பரத்தில் சீன கொடி.. திமுகவின் தேசப்பற்று குறித்து பிரதமர் விமர்சனம்.. கனிமொழி ரியாக்ஷன் என்ன?