சென்னை: 18வது மக்களவைத் தேர்தல் மற்றும் அதன் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்திற்கு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் அக்கட்சி, மாநிலக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கவுள்ளது. அதேநேரம், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, மக்களின் அதீத நம்பிக்கையைத் தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், வரும் காலத்தில் பாஜக ஆட்சியில் நிலவப்போகும் சிக்கல்கள் என்ன? இந்த தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழகத்தில் பாஜகவின் நிலை மற்றும் நிலைப்பாடு என்ன? இந்தியா கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளரும், தி இந்து குழும இயக்குனர்களில் ஒருவருமான என்.ராம் ஈடிவி பாரத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். இதில் அவர் பேசியவற்றைக் காணலாம்.
கேள்வி: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி 3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. எனினும், முன்பு போல தனிப் பெரும்பான்மை பெறவில்லை. இந்த அரசு குறித்து உங்கள் பார்வை என்ன?
மத்தியில் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆனாலும், இனி அவரால் தன்னிச்சையாக செயல்படவே முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் மாநிலக் கட்சிகளுடன், அதிலும் முக்கியமாக ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தே திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
இதில் ஏதேனும் கருத்து வேறுபாடு மற்றும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் கூட்டணியில் இருந்து விலகவும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஆட்சி மாற்றமும் ஏற்படலாம். ஏனென்றால், பிரதமர் மோடிக்கு இந்த கூட்டணிக் கட்சிகளோடு இணங்கி ஆட்சி செய்த அனுபவம் சுத்தமாக இல்லை. மேலும், அவர் இன்று வரை முதலமைச்சர் தேர்தலிலும் சரி, பிரதமர் தேர்தலிலும் சரி மிகப்பெரிய கூட்டத்தை தன்பக்கம் வைத்துக்கொண்டு தான் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்து 10 ஆண்டுகளாக அவர் அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்திருக்கலாம். இனி அவருக்கு அந்த சுதந்திரம் இல்லை. இனி எடுக்கப்போகும் முடிவுகள் கண்டிப்பாக அனைவரையும் கலந்து ஆலோசித்துவிட்டு தான் எடுக்க முடியும். அதிலும் குறிப்பாக, இந்தியக் குடிமக்கள் பதிவேடு (NRC), பொது சிவில் சட்டம் (Uniform Civil Code), நிதித்துறை மற்றும் மாநிலங்கள் மீதான ஆளுநர்களின் தலையீடு ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றம் கண்டிப்பாக இருக்கும். அப்படி மாற்றம் இல்லை என்றால், மாநிலங்கள் வாரியாக மிகப்பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.
பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, அவருக்கு இது முதல் தோல்வி என்றே கூறலாம். கூட்டணிக் கட்சிகளோடு வேறு வழியின்றி சகித்துக்கொண்டு ஆட்சி நடத்தும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால், பிரதமர் மோடியின் அரசியல் போக்கில் இனி கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும்.
சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் பாஜக அரசுடன் இணங்கி செயல்பட எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது?
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில உரிமைகளுக்கும், சுயமரியாதைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் மனிதர். தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைக் கொண்டுள்ள திறமையான அரசியல் தலைவர். அதேபோல, என்னதான் கூட்டணியில் இருந்தாலும், சில நேரங்களில் அவர்களின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களில் இருந்து மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கும் தலைவர்களின் மிக முக்கியமானவர், நிதிஷ்குமார். இப்படியான தலைவர்களுடன்தான் பாஜக இனி ஆட்சி செய்தாக வேண்டும். மற்றொரு பக்கம், என்னதான் கூட்டணி அமைத்து ஆளும் கட்சியோடு இணைந்து ஆட்சி செய்தாலும், பிரதமர் மோடியின் கருத்துக்களுக்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரால் முழுமையாக உடன்பட முடியாது. அப்படி உடன்பட்டால் அவர்களின் அரசியல் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும்.
இந்தியா கூட்டணியின் தற்போதைய அரசியல் இலக்கு மற்றும் வெற்றி எந்த அளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது?
இந்த தேர்தலில் பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் கட்சியும் சரிசமமாக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மக்கள் இந்தியா கூட்டணியை மிகுதியாக ஆதரித்துள்ளனர். மேலும், மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி இந்த வருடத் தேர்தலில் நன்றாக முன்னேறி இருக்கிறது. இனி வரும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றி முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
திமுகவின் 40க்கு 40 வெற்றியால் தமிழகத்திற்கு கிடைக்கப்போகும் பலன்கள் என்ன?
இந்திய அளவில் மிகப்பெரிய மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் திமுக 40க்கு 40 என்ற இலக்கை வென்றுள்ளது பாராட்ட வேண்டிய ஒன்று. இந்தியா கூட்டணிக்கு திமுகவின் வெற்றி மிகுதியான பலத்தைச் சேர்த்துள்ளது. தமிழகத்தில் இனி ஆளுநரின் தலையீடு முற்றிலும் குறையும்.
மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட, அதிலும் முக்கியமாக பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை அவர்கள் நடத்திய விதம் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். இதை மு.க.ஸ்டாலின் சிறப்பாகக் கையாளுவார்.
கடந்த காலங்களில், மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதில் தமிழ்நாடு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. மேலும், ஜிஎஸ்டியில் இருந்து மாநிலத்திற்கான மத்திய அரசின் நிதிப் பங்கீடு உள்ளிட்டவைகளும் வழங்கப்படவில்லை.
இனி இதுபோன்ற நியாயமான கோரிக்கைகளுக்காக மக்களோடு சேர்ந்து போராட வேண்டும். இந்த மாதிரியான விஷயங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாகக் கையாளுவார். ஏனெனில், அவருக்கு இதில் நல்ல அனுபவம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்ற அனுபவமிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜகவின் தோல்விக்கான காரணம் மற்றும் தற்போதைய நிலை என்ன?
தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் அரசியல் ஈர்ப்பு நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பலிக்கவில்லை என்பது பச்சையாகத் தெரிகிறது. இந்தி (Hindi) ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்தத்துவா தான் முக்கியக் காரணம். அவர்கள் செய்யும் தவறுகள் மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. உயர் சாதியினர் போன்ற ஒரு சிறு குழுவினர் வேண்டுமானால் அவரை பாராட்டலாம். ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு மோடியின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை.
அதேபோல தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சிறப்பாக வேலை பார்த்துள்ளது. ஆனால் அது இங்கு எடுபடவில்லை. தமிழக மக்களுக்கு பாஜகவின் கொள்கைகள் பிடிக்கவில்லை. அதனால்தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஈபிஎஸ் போன்றோர் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை. மேலும், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் தேர்தலில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அதற்கான வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஆனால், அண்ணாமலை தேர்தலின்போது அதீத பேச்சை வெளிப்படுத்தினார்.
இதனால் அவர் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் மிகவும் அடிபட்டது. மேலும், செய்தியாளர்களிடம் அவர் நடந்துகொண்ட விதம் சரியாக இருக்கவில்லை. கண்டபடி வார்த்தைகளைப் பயன்படுத்தினார். மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். இதனால் அவரின் வாக்கு வங்கி குறைந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, அவர் எதற்கு கோயம்புத்தூரில் வேட்பாளராக நின்றார் எனத் தெரியவில்லை. தப்புக்கணக்கு போட்டுவிட்டார். டெல்லி போன்ற இடங்களில் அவரை தெரியாத ஆட்கள் கிடையாது என்ற நிலையில், அங்கு அவர் நின்றிருக்கலாம்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 9 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது.. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழகத்தில் அதிமுக நிலை குலைந்துவிட்டது என்பது உண்மைதான். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். பாமக போன்ற வலிமைமிக்க கட்சிகள் அதிமுகவில் இருந்து விலகியது பெரும் இழப்புதான். பாமகவின் ஆரம்பகால கூட்டணிக் கட்சியே அதிமுகதான் என்ற நிலையில், தற்போது கூட்டணியை அவர்கள் மாற்றியுள்ளனர். இது அரசியலில் சாதாரணமான ஒரு விஷயம் தான் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன? ஆந்திரா, பீகார் சிறப்பு அந்தஸ்து கோர காரணம் என்ன? அதனால் என்ன பலன்? - What Is Special Status