மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 6 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
இதில் நேரடியாக மறைமுகமாக லட்சக்கணக்கான இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக காஞ்சிபுரம், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆனால், தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகள் பெரிய அளவில் இல்லை.
இதனால் தொழில் வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பில் பின்தங்கிய பகுதியாகத் தென்மாவட்டங்கள் உள்ளன. மேலும் தமிழக அரசும் தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறாத சூழல் உள்ளது.
ஆகவே, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை அதிகரித்து தொழிற்சாலைகள் துவங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், "மனுதாரரின் கோரிக்கை என்பது நியாயமான கோரிக்கை. அதே நேரத்தில், தொழிற்சாலைகள் துவங்குவது தென் மாவட்டங்களில் அதிக முதலீடு செய்யும் நிறுவனங்களைக் கொண்டு வருவது போன்ற விவகாரங்கள் அரசின் கொள்கை ரீதியான நடவடிக்கை.
மேலும், எங்கு தொழிற்சாலை துவங்க வேண்டும் என்பதைத் தமிழ்நாடு அரசும், முதலீட்டாளர்களும் தான் முடிவு செய்ய முடியும். இதுபோன்ற அரசின் கொள்கை ரீதியான முடிவுகளில், நீதிமன்றம் தலையீடு செய்ய முடியாது" என கூறி இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மேலும், மனுதாரர் தனது கோரிக்கையைச் சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளிடம் கொடுத்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருடிய பதக்கத்தை திருப்பிக் கொடுத்த திருடன்.. இயக்குநர் மணிகண்டன் வீட்டு கொள்ளைச் சம்பவத்தில் திருப்பம்!