மதுரை: தமிழ்நாட்டில் குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரணை செய்து வருகிறார்.
அதாவது கடந்த மாத விசாரணையின் போது, பெரும்பாலான குற்றவியல் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிகிறது. அவ்வாறு இருந்தால் குற்றவியல் நீதி பெரும்பாலும் முடங்கும் நிலை ஏற்படும். இதனால் அவர் தமிழ்நாடு முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களில் எத்தனை அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது? காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, உயர்நீதி மன்ற உத்தரவிற்கிணங்க காலியாக இருந்த 14 அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் பணியிடங்களை நிரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், காலியாக உள்ள 5 குற்றவியல் துறை துணை இயக்குநர் பணியிடங்களையும், 2003ஆம் ஆண்டு அரசு வெளியிட்டுள்ள விதிகளின்படி நிரப்ப உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி கே.கே ராமகிருஷ்ணன் நீதிமன்ற உத்தரவின்படி குறுகிய காலத்திற்குள் காலியாக உள்ள குற்றவியல் வழக்குரைஞர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், துணை இயக்குநர் பதவி உயர்வினால் ஏற்படும் பணியிடங்களையும் ஒரு மாதத்திற்குள் நிரப்ப அரசின் அறிவுரையைப் பெற்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, இந்த வழக்கில் சிறப்புக் கவனம் எடுத்து அரசிடம் தெரிவித்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய குற்றவியல் துறை இயக்குநரும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருமான அசன் முகமது ஜின்னாவுக்கும் நீதிபதி தனது பாராட்டுதல்களைத் தெரிவித்து, வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.