ஈரோடு: இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரமாக வாக்குகளைச் சேகரிப்பதற்கு வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வித்தியாசமான பல்வேறு உத்திகளையும் பிரச்சாரத்தில் கையாண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நீலகிரி தனி தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதனை அடுத்து, நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் தனது ஆதரவாளர்களுடன் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில், சத்தியமங்கலம் மைசூர் சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் உரிய அனுமதி பெறாமல் தேர்தல் விதிமுறைகளை மீறி எல்.முருகன் தலைமையில் 100 பேர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது டிஜிட்டல் வகுப்பறையைத் திறந்து வைப்பதற்கு வந்ததாகத் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் அளித்த புகாரின் அடிப்படையில், சத்தியமங்கலம் போலீசார், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல, கடந்த மாதம் 25ஆம் தேதி எல்.முருகன் நீலகிரியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு அன்று மாலை 5 மணி அளவில் நீலகிரியில் உள்ள கடநாடு கிரியுடையார் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் தொடர்ச்சியாக, கடநாடு சமுதாயக்கூடம் முன்பு எந்தவித அனுமதியும் வாங்காமல், 100க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த கூட்டம் குறித்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர், துணை வட்டாட்சியர் தனலட்சுமி, தேனாடுகம்பை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "பாஜக ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தலே நடைபெறாது" - அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டு!