பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் அருகே உள்ள நாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் என்பவரின் மகன் வெங்கடேசன் (25). ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ள அவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலைக்காக ஒருவரிடம் பணம் கொடுத்து, வேலையும் கிடைக்காமல் பணமும் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஊரைச் சுற்றி வருவதாகவும், வீட்டில் உள்ளவர்களிடம் மற்றும் பிறரிடம் பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெங்கடேசன் மீது, அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் மதுபோதையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து பல்வேறு நாட்களில், பல்வேறு இடங்களில் வைத்து அவர் மீது தாக்குதல் நடத்திய கும்பல், ஒரு கட்டத்தில் அவரை கட்டிப்போட்டு ரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு அடித்தது மட்டுமல்லாமல், மது பாட்டிலை உடைத்து குத்திக் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதுபோன்ற தாக்குதலின் போது வெங்கடேசன் உயிரிழந்து விட்டால், தனது சாவுக்கு தானே காரணம் என்று அந்த கும்பல் வெங்கடேசனை அடித்து வாக்குமூலமும் பெற்று, அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தனர். இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுள் ஒருவரின் செல்போனில் இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் நகர போலீசார் நாவலூர் கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், அதே ஊரைச் சேர்ந்த முருகவேல் (27), ரஞ்சித் (30), அருண் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மூவர் மீது 294(b),323,324,506(ii) IPC 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், 17 வயது சிறுவனை தவிர்த்து முருகவேல் மற்றும் அருணை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த கும்பல் வெங்கடேசன் வீட்டுக்கேச் சென்று அவரது வீட்டில் உள்ளவர்களையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “மாணவர்களிடையே கருத்து மோதல்கள் இருப்பது எதார்த்தம்”.. நெல்லை சம்பவம் குறித்து அப்பாவு கருத்து!