மதுரை: நாகர்கோவில் - கோயம்புத்தூர் விரைவு ரயிலில் மேல் படுக்கை எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் நான்கு வயது சிறுவன் படுகாயமடைந்த இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வாஞ்சி மணியாச்சி ரயிலில் கோயம்புத்தூர், கவுண்டர் மில் பகுதியைச் சேர்ந்த மேத்யூ என்பவரது மனைவி புவிதா தனது மகன் ஜெய்சன் தாமஸ் (வயது 4) ஆகிய இருவரும் S7 பெட்டியில் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக பயணம் செய்து வந்தவர்கள் மீது மேலிருந்த படுக்கை(UPPER BERTH) திடீரென கீழே விழுந்ததில் நான்கு வயது சிறுவன் ஜெய்சன் தாமஸ் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி ரயில் வந்த போது காயம் பட்ட சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக இறக்கி விடப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் காரணமாக அக்குறிப்பிட்ட ரயில் பெட்டியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதிர்ஷ்டவசமாக மோசமான காயம் ஏற்படாமல் சிறுவன் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகளும் ரயில்வே போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை ரயில்வே சந்திப்பு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு காயம் பட்ட சிறுவனை மருத்துவமனையில் சேர்த்ததை பயணிகள் பாராட்டினர்.