திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள பைரபள்ளி பகுதியில் குரு என்பவரது செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. அங்கு சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்த அமரேசன், பவித்ரா தம்பதியினர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பூமிகா என்ற 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில், செங்கல் சூளையில் அமரேசன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு டிராக்டரை வைத்து மண்ணை பதப்படுத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த அவரது 9 மாத குழந்தை பூமிகா, எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின் பக்க சக்கரத்தில் சிக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து குழந்தையின் சத்தம் கேட்டுப் பார்த்த போது, குழந்தையின் தலை பின்பக்க சக்கரத்தில் சிக்கிய நிலையில் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அதனைக் கண்ட உறவினர்கள், குழந்தையைக் கொலை செய்து விட்டதாகக் கூறி அமரேசனைத் தாக்கியுள்ளனர். மேலும், அடிதாங்க முடியாமல் அமரேசன் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார், செங்கல் சூளையிலிருந்து டிராக்டரை பறிமுதல் செய்து, டிராக்டரை இயக்கிய குழந்தையின் தந்தை அமரேசனைத் தேடி வருகின்றனர். தற்போது தந்தை இயக்கிய டிராக்டரில் சிக்கி 9 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.