திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 பேருடன் கடந்த வெள்ளிக்கிழமை 2 காரில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அங்கு சுமார் 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது, திடீரென முன்னே சென்ன ஒரு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பெயர்ப்பலகை மற்றும் கற்கள் மீது மோதி, அதேவேகத்தில் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேரும் காயமடைந்த நிலையில், அதனைக் கண்ட மற்றொரு காரில் வந்த நபர்கள் உடனடியாக காயமடைந்த நபர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, விபத்தில் சிக்கி படுகாயமடைந்த விஜியா, சாலம்மாள், அன்புச்செழியன், ஜீவா ஆகிய 4 பேரும் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுவிட்டு, திரும்பி வரும் போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.