தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் 17 ஆயிரத்து 341 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய விமான முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ராஜேஷ், முனையக் கட்டுமான பிரிவுத் தலைவர் பாரி, மின்னணுவியல் பிரிவு பொது மேலாளர் வி.எஸ்.கிருஷ்ணன், இணைப் பொது மேலாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த புதிய முனையம் மூன்று தளங்களுடன் கூடிய வகையில் அமையவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு, கட்டுப்பாட்டுக் கோபுரம் மற்றும் அதைச் சார்ந்த அலுவலகக் கட்டடங்கள், தீயணைப்புத்துறை கட்டடங்கள் உள்ளிட்ட கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமான நிலைய புதிய முனையத்திற்கு செல்லும் வகையில் 1 கி.மீ. தூரத்திற்கு இணைப்புச் சாலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதைத் தவிர்த்து, புதிய முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், 21 பயணியர் செக்-இன் கவுண்டர்களும், 3 ஏரோ ப்ரிட்ஜ்களும், 2 வருகைக்கான கன்வேயர் பெல்ட்களும், ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணியர் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 வி.ஐ.பி அறைகள், லிப்ட் வசதிகள், பயணிகள் அதிகமாக வருகை தரும் நேரங்களில் 1 மணி நேரத்திற்கு 1440 பயணிகளைக் கையாளக்கூடிய வகையிலான வசதிகள், பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு, பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதிய முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்பட்டு வருகிறது. முனையக் கட்டடங்கள் முழுவதும் சோலார் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 76 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, வருகின்ற 2024 அக்டோபர் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய முனையத்தில் ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3,115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்போதுவரை இந்த விமான ஓடுதளம் அமைக்கும் பணியானது 93 சதவீதம் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிவடையவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காது கேளாதோருக்கான கிரிக்கெட்; இங்கிலாந்தை வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! அரசு வேலை வழங்கக் கோரிக்கை