திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு போலீசார் தாழைகுளம் விலக்கு அருகே இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக நாகர்கோவில் நோக்கி வந்த ஒரு பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனை அடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தில் வந்தவர்களிடம் துருவித் துருவி சோதனையிட்டனர். அதில், 500 ரூபாய் தாள்களை கொண்ட 75 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து வாகனத்தில் கள்ள நோட்டுகளுடன் வந்த சிவகாசியை சார்ந்த சீமைசாமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சார்ந்த கிருஷ்ண சங்கர், தங்கராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து எட்டு செல்போன்கள், ஒரு அரிவாள் மற்றும் கள்ள நோட்டு தயாரிக்கும் சில உபகரணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும், கள்ளநோட்டு கும்பலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் மிகப்பெரிய தொகையில் கள்ள நோட்டு பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? கள்ள நோட்டு எங்கு அச்சடிக்கப்பட்டது? இங்கிருந்து எங்கு அதை எடுத்து சென்றார்கள்? ஏற்கனவே கள்ள நோட்டுகளை இதே கும்பல் புழக்கத்தில் விட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'இந்த ரூட்ல எப்படி வருவ?' உருட்டு கட்டையுடன் பாய்ந்த மினி பஸ் டிரைவர்.. பயணிகள் அதிர்ச்சி!